பாஜக விருப்பம் நிராகரிப்பு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து கடந்த செப்.22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து, நேற்று வேட்பாளரை இறுதி செய்வதற்காகவும், தேர்தல் பணி தொடர்பாக அறிவுரைகள் வழங்குவதற்காகவும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர்பழனிசாமி தலைமையில் மாலை 5 மணிக்குத் தொடங்கிய கூட்டம், 6.10 மணிக்கு நிறைவடைந்தது.

இதையடுத்து, விக்கிரவாண்டி, நாங்குநேரி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியக் கழகச் செயலாளராக இருக்கும் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் விக்கிரவாண்டி தொகுதியிலும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருக்கும் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நாங்குநேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்,

2016 ஆம் ஆண்டு தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் அதிமுக போட்டியிட்டு தோல்வி அடைந்தது.அப்போது பாஜக தனியாகப் போட்டியிட்டது. ஆனால் இப்போது அதிமுகவுடன் கூட்டணியிலிருப்பதால் நாங்குநேரி தொகுதியில் பாஜக போட்டியிட அக்கட்சி விருப்பம் தெரிவித்தது என்றார்கள்.

ஆனால் இப்போது இரு தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாஜக வின் விருப்பத்தை அதிமுக நிராகரித்துவிட்டது என்கிறார்கள்.

Leave a Response