காஷ்மீர் விற்பனை தொடங்கிவிட்டது – அரசு அறிவிப்பால் விமர்சனங்கள்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமை இரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது மத்திய அரசு. ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு சிறப்புரிமை தடையாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அங்குள்ள மக்களோ அதற்கு நேரெதிராகப் பேசுகிறார்கள்.

முதலில் சுற்றுலாப் பயணிகளுக்கு, பக்தர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்றார்கள். ஆனால், அது போல எதுவும் நடக்கவில்லை. இது திட்டமிட்ட செயல். அவர்கள் சட்ட உறுப்புரை 370 மற்றும் 35 ஏ வை இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக இதனையெல்லாம் செய்திருக்கிறார்கள். சட்டத்தை நாசம் செய்துவிட்டார்கள். காஷ்மீரி மக்கள் அவர்களுக்கு வேண்டாம். அவர்களுக்கு காஷ்மீர் நிலம் மட்டும்தான் வேண்டும். காஷ்மீரிகள் பசியில் இருக்கிறார்களா அல்லது சாகிறார்களா என்பது குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை என்று பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார் பயண முகவரான இக்பால்.

அவர் சொன்னதை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதில்,

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, முதலீடுகளை பெற வரும் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அத்துடன், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சத்தை போக்குவதற்கும் உதவும் என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மைச் செயலர் (தொழிற்சாலைகள்) நவீன் சவுத்ரி சவுத்ரி தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழிலதிபர்கள், தொழிற்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மூத்த மத்திய அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக மத்திய உள்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்களும் உறுதியளித்துள்ளன.

இந்த அறிவிப்பு வெளியானதும் காஷ்மீரை பெருமுதலாளிகளிடம் விற்பனை செய்யும் வேலை தொடங்கிவிட்டது என்கிற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response