அண்மையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப் பிரிவு 370 ஐ இரத்து செய்தது மத்திய அரசு. அதோடு,அம் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.
இதற்காக, “ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019” மசோதாவையும் நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றியது.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே இராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளிச் சிறைச் சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.
மாநிலம் முழுவதையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாகவும், எந்த பிரச்னையும் இன்றி வாழ்வதாக பா.ஜ.க தலைவர்கள் பேசிவருகின்றனர். எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மக்களுடன் சகஜமாக சாப்பிடுவது போல், நடிகர்களை வைத்து காணொலி வெளியிட்டு வருகின்றனர். பா.ஜ.க.,வின் இந்தச் செயல் பொய் என்பது சமீபத்தில் ஊடகங்கள் வழியே அம்பலமானது.
வெள்ளியன்று காஷ்மீரில் 10 ஆயிரம் காஷ்மீர் மக்கள் ஒன்று திரண்டு மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடத்தியதாக பி.பி.சி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் காணொலி வெளியிட்டன.
அதில், போராடும் மக்கள் மீது இராணுவத்தினர் பெல்லட் குண்டுகளையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தி கலைக்க முற்படுகின்றனர். ஆனால், காஷ்மீரில் போராட்டம் வெடித்ததாக வெளிவரும் செய்திகள் பொய் என்று உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பி.பி.சி பத்திரிக்கையாளர் அமீர் பிர்ஸாடா காஷ்மீரில் இருந்து மற்றொரு காணொலியை வெளியிட்டார். அதில், மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமைதியாக நடத்திய போராட்டத்தில் தீடிரென வன்முறை வெடித்தது. பாதுகாப்புப் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிவித்தார் அமீர்.
இந்தக் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது மத்திய அரசு. ஸ்ரீநகர் காவல்துறை ஆணையர் கடந்த 6 நாட்களில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு கூட வெளியேறவில்லை என தெரிவித்தார்.
இதனால், பி.பி.சி வெளியிட்ட காணொலி பொய் என பா.ஜ.க.வினர் தெரிவித்து வந்தனர். திட்டமிட்டு பி.பி.சிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
தங்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதை அறிந்த பி.பி.சி, தனது நிலைபாட்டை தெரிவித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பி.பி.சியின் அந்த விளக்கத்தில் ” காஷ்மீரில் நடைபெறும் நிகழ்வுகளை நாங்கள் தவறாகச் சித்தரித்தோம் என்ற கூற்றைக் கடுமையாக மறுக்கிறோம். அங்குள்ள நிலைமையைப் பாரபட்சமின்றி துல்லியமாக எடுத்துரைக்கிறோம். மற்ற செய்தி நிறுவனங்களைப் போலவே நாங்களும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தற்போது செயல்பட்டு வருகிறோம். இருப்பினும், காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து தெரிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளது.