அதிர்ஷ்டத்தில் வென்ற இங்கிலாந்து – பரபரப்பான இறுதி ஆட்டம்

உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டிகள் (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 12 ஆவது உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்தில் மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.

தகுதிச்சுற்று மற்றும் அரைஇறுதிச் சுற்று முடிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் இலண்டன் லார்ட்சில் நேற்று (ஜூலை 14 ) நடந்தது.

அங்கு காலையில் லேசாக பெய்த மழை காரணமாக ஆட்டம் 15 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். புற்களுடன் கூடிய ஆடுகளம், மேகமூட்டமான சீதோஷ்ண நிலை என்று வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்தனர். துரிதமாக ரன் எடுக்க முனைப்பு காட்டிய மார்ட்டின் கப்தில் (19 ரன், 18 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து நிகோல்சுடன் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானத்தைக் கடைபிடித்தனர். அதே சமயம் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாகவும், அவ்வப்போது பவுன்சர் தாக்குதலும் தொடுத்தனர். மார்க் வுட் வீசிய ஒரு பந்து மணிக்கு 154 கிலோமீட்டர் வேகத்தில் சீறியது.

அவசரப்படக்கூடாது என்ற நோக்குடன் ஆடிய வில்லியம்சன் முதல் 22 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு கொஞ்சம் வேகமாக ஆடி ரன்களை சேகரித்தார். இங்கிலாந்து பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் துடிப்புடன் காணப்பட்டதால் அதிரடி காட்ட முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

அந்த அணி 21.2 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. ஸ்கோர் 103 ரன்களை எட்டிய போது வில்லியம்சன் (30 ரன், 53 பந்து, 2 பவுண்டரி) வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கெட்டின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் பிடிபட்டார். முதலில் நடுவர் தர்மசேனா (இலங்கை) விரலை உயர்த்த மறுத்தார். பிறகு இங்கிலாந்து டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, பந்து பேட்டில் உரசியது தெரியவந்தது. இதையடுத்து வில்லிம்சன் வெளியேற்றப்பட்டார்.

இதன் பிறகு நியூசிலாந்தின் ரன்ரேட் மந்தமானது. அடுத்த 12 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே போகவில்லை. இதற்கிடையே நிகோல்ஸ் 55 ரன்களில் (77 பந்து, 4 பவுண்டரி) பிளங்கெட்டின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். மூத்த வீரர் ராஸ் டெய்லர் 15 ரன்னில் வீழ்ந்தார்.

சீரான இடைவெளியில் நியூசிலாந்துக்கு விக்கெட்டுகள் சரிந்தன. இதற்கு மத்தியில் டாம் லாதம் (47 ரன், 56 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஓரளவு நிலைத்து நின்று ஆடி அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ், பிளங்கெட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். எக்ஸ்டிரா வகையில் இங்கிலாந்து வீரர்கள் 17 வைடு உள்பட 30 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து 242 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியும் தடுமாறியது. முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டு பலன் கிடைக்கவில்லை. ஆனாலும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினர். அவ்வப்போது வேகம் குறைந்த பந்துகளையும் வீசி திகைக்க வைத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 17 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும் (30 பந்து), மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோ 36 ரன்னிலும் (55 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் மோர்கன் 9 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அப்போது இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 86 ரன்களுடன் (23.1 ஓவர்) தத்தளித்துக் கொண்டிருந்தது. வழக்கமாக ரன்மழை பொழியும் இங்கிலாந்து வீரர்கள் முக்கியமான இந்த ஆட்டத்தில் நெருக்கடியில் சிக்கினர்.

இந்த சூழலில் 5 ஆவது விக்கெட்டுக்கு ஜோஸ் பட்லரும், பென் ஸ்டோக்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால் பரபரப்பும் எகிறியது. இருவரும் அரைசதத்தை கடந்த நிலையில் பிரிந்தனர். ஸ்கோர் 196 ரன்களாக உயர்ந்த போது ஜோஸ் பட்லர் (59 ரன், 60 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 2 ரன்னில் வெளியேற, நியூசிலாந்தின் கை மீண்டும் ஓங்கியது. ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் பென் ஸ்டோக்ஸ் மட்டும் கம்பீரமாக போராடிக்கொண்டிருந்தார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. இங்கிலாந்தின் கைவசம் 2 விக்கெட் இருந்தது. உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் இறுதி ஓவரை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார்.

முதல் 2 பந்துகளில் ரன் அடிக்காத பென் ஸ்டோக்ஸ் 3 ஆவது பந்தை சிக்சருக்கு அனுப்பினார். 4 ஆவது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன் ஓடி எடுத்த போது அவரை ரன்-அவுட் ஆக்க நியூசிலாந்து பீல்டர் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். எதிர்பாராதவிதமாக பந்து பென் ஸ்டோக்சின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியது. இதனால் கூடுதலாக 4 ரன் வழங்கப்பட்டது. இது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது.

இதன் பின்னர் 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. 5 ஆவது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ஆவது ரன்னுக்கு ஓடிய போது எதிர்முனையில் நின்ற அடில் ரஷித் ரன்-அவுட் ஆனார்.

இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்தது. முடிவு என்னாகுமோ என்ற டென்ஷனில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். இறுதிப் பந்தை தட்டிவிட்டு பென் ஸ்டோக்ஸ் வேகமாக ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2 ஆவது ரன்னுக்கு திரும்பிய போது மார்க்வுட் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இதையடுத்து திரிலிங்கான இந்த ஆட்டம் டை (சமன்) ஆனது. இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களுடன் (98 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டம் டையில் முடிந்தது இதுவே முதல் நிகழ்வாகும். இதையடுத்து உலக சாம்பியன் யார்? என்பதை முடிவு செய்ய சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து பேட் செய்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் பந்து வீசினார். இதில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் -ஜோஸ் பட்லர் கூட்டணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் எடுத்தது.

இதன் பின்னர் சூப்பர் ஓவரில் 16 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து ஆடியது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பவுலிங் செய்தார். முதல் 5 பந்தில் 14 ரன் எடுத்த நியூசிலாந்துக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. ஆனால் இந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து நியூசிலாந்து வீரர் கப்தில் ரன்-அவுட் செய்யப்பட்டார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்தும் 15 ரன் எடுத்ததால் மீண்டும் டை ஆனது.

போட்டி 2 ஆவது முறையாகவும் டை ஆகும் பட்சத்தில் ஆட்டத்தில் அதிக பவுண்டரி அடித்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும். அந்த வகையில் நியூசிலாந்தை விட இங்கிலாந்து அணி 6 பவுண்டரிகள் கூடுதலாக அடித்திருந்ததால் இங்கிலாந்து உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.

44 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியால் அந்த நாடு முழுவதும் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.

Leave a Response