ஜெ விடுதலையை விமரிசித்தவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் வழக்கா?

கோவை மாவட்ட காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான சனநாயக அரசியல் இயக்கங்களின் கூட்டறிக்கை;

கோயமுத்தூர் கருமத்தம்பட்டியில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தினர் என ஐவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி ஆழியார் காவல்நிலையத்தில் நிலுவையிலிருந்த வழக்குத் தொடர்பாக செல்வராஜ், கணபதி ,சிகாமணி என மூன்றுபேர் மாவோயிஸ்ட் இயக்க ஆதரவாளர்கள் என்று சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கோயமுத்தூர் வெள்ளலூர் பகுதியைச் சார்ந்த மாசான முத்து மற்றும் நாகமாணிக்கும் என்னும் இருவர் இதைப் போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை, வழக்கு போடுவதற்காக காவல்துறை தேடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் கோவை சாய்பாபா காலணி காவல்துறை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலை குறித்து விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் விளவை ராமசாமி மற்றும் அவரது மகன் திலீபன் ஆகியோரை கைது செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் மணிவண்ணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசால் 1987-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தடா சட்டமும், அதே போன்று 2001-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொடா சட்டமும் கடுமையான உரிமை மீறலுக்கு இட்டுச்சென்றன. பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதாகக் கூறிக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவர் மீதும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் மீதும், இந்த சட்டங்கள், சனநாயக உரிமைகளை நசுக்கும் நோக்கில் முறை கேடாக பயன்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் வாடினர். நியாயமற்ற விசாரணை முறையினை கொண்டிருந்த இந்த சட்டங்களின் வழக்கு விசாரணையில் கூட வெகு சிலரே தண்டிக்கப்பட்டனர்.குற்றம் புரியாதவர்கள் பல ஆண்டு சிறைக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர். பயங்கரவாத நடவடிக்கைகளை இந்த சட்டம் தடுப்பதற்கு பதிலாக அரசியல் பழிவாங்கவும் , மாற்றுக் கருத்து கொண்டோரை சிறைபடுத்தவும் இந்த சட்டங்கள் அரசுக்கு உதவின. சமூக ,சனநாயக அரசியல் இயக்கங்கள் இந்த சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததால் இந்த கொடிய சனநாயக விரோத சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. ஆனால் 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை காரணம் காட்டி இந்த இரு சட்டங்களிலும் இருந்த சனநாயக விரோத சட்டபிரிவுகளை மீண்டும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டத்தில் மத்திய அரசு இணைத்தது. நாட்டின் சனநாயக தன்மைக்கு எதிரான இந்த சட்டத்துக்கு முற்போக்கு சனநாயக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் இந்த கொடிய சட்டத்தின் கீழ் இடதுசாரி ஆதரவாளர்கள் தற்போது வேட்டையாடப்படுகின்றனர். கருத்தியல் ரீதியாக நக்சல்பாரி கருத்துக்கு ஆதரவாக உள்ளவர்களையும் ,மேலும் மக்களின் சமூக பிரச்சனைகளில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள் மீதும் காவல்துறை தற்போது பொய் வழக்குகளை சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்து வருகின்றது.
ஏற்கனவே பி.யூ.சி.எல் பொடா சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் 2004- ல் உச்சநீதிமன்றம் ஒருவர் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக கருத்து கொண்டிருப்பது , கூட்டங்களில் பேசுவது என்பதே பயங்கரவாத செயல் என கருதக் கூடாது என கூறியது. மேலும் 2011-ம் ஆண்டு மீண்டும் , மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்பதே ஒருவரை கைது செய்ய போதுமானதல்ல என கருத்து கூறியது. இதே கருத்தை கடந்த மாதம் கேரளா உயர்நீதிமன்றம் சியாம் பாலகிருஷ்ணன் என்ற வழக்கில் உறுதிப்படுத்தி, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சனநாயக சமூகத்தில் மாற்றுக்கருத்து மற்றும் மாற்று அரசியல் என்பதை குற்றசெயலாக பார்க்கக் கூடாது. ஆனால் காவல்துறையின் அண்மைக் கால அடக்குமுறை மற்றும் முறை கேடான சட்ட பயன்படுத்தல் சனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.
மேலும் மாற்று அரசியல் கருத்து கொண்டோரின் கருத்து சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கும் சனநாயக விரோத செயலாகவும் உள்ளது. காவல்துறையின் அடக்குமுறையின் மூலம் நசுக்கப்படும் மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகளையும்,பண்பினையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அடக்குமுறையிகளை எதிர்ப்பது நமது கடமையாகும்.
.எனவே அடக்குறை சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தில் Unlawful activities (prevention) act 1967 கைது செய்யப்படும் அத்துமீறல் கைவிடப்படவேண்டும்.
• காவல்துறை சாமானிய கருத்தியல் ஆதரவாளர்கள் அல்லது விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது தாக்கல் செய்துவரும் பொய் வழக்குகளை கைவிடவேண்டும்.
• அரசியல் அமைப்புச்சட்டம் அங்கீகரித்துள்ள கருத்துரிமையை நசுக்கக் கூடாது.
• கருத்து சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வழிகாட்டுதல்களை கடைப் பிடிக்கவேண்டும்.
• அடக்குமுறை மற்றும் சனநாயக விரோத அத்துமீறலை கைவிடவேண்டும்.
• பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

Leave a Response