புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை

மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றதும், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, 2016-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கை முன்வரைவு எனும் ஆவணத்தின் அடிப்படையில், தனது முழுமையான அறிக்கையை மே 31-ம் தேதி சமர்ப்பித்துள்ளது.

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவை வெளியிட்டிருக்கும் மத்திய அரசு, ஜூன் 30-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து கூறலாம் என அறிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கை, கட்டாய இந்தி மொழி என உடனடியாக சர்ச்சை கிளம்ப, அந்தப் பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை குறித்துப் பெற்றோர்கள் அறிந்து கொள்வது அவசியம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது…..

30 கோடி இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற கல்விக்கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதைப்பற்றிய உரையாடல்களோ, விவாதங்களோ இன்னும் போதிய கவனம் பெறவில்லை.

அனைவருக்கும் சமமான கல்வியை வழங்க என்ன செய்ய வேண்டும்? உயர்கல்வி படிக்க தகுதித்தேர்வு அவசியமா? கல்வி கற்பிக்கிற மொழிக்கொள்கையில் போதிய தெளிவு இருக்கிறதா?

நம் குழந்தைகளின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இதுபோன்ற பல கேள்விகளுக்கு, புதிய கல்விக்கொள்கையின் பதில் என்ன?

நம் எல்லோருக்கும் கல்வி பற்றிய கருத்துகள் உண்டு. ஆனால், கல்விக்கொள்கை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், நம் கருத்துகளை முன்வைக்காமல் அமைதியாகக் கடந்துவிடுகிறோம்.

அந்த ‘அமைதி’, நம் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கும். கல்விக்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கிற பெற்றோர்கள், புதிய கல்விக்கொள்கை பற்றி படித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.

ஜூன் 30-ம் தேதிக்குள் இந்தக் கல்விக்கொள்கை பற்றிய நமக்கு ஏற்புடைய, ஏற்பில்லாத கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை, தமிழில் மொழ்பெயர்த்த அறிஞர் குழுவுக்கு நன்றிகள்.

நம்முடைய பங்கேற்பு மட்டுமே, நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், சிறந்த எதிர்காலத்தையும் அளிக்கும்.

அனைவரும் பங்கேற்று, சமூக ஊடகங்களில் உரையாடுவோம். தமிழகக் கல்வியாளர்களிடம் இருந்து விளக்கங்களைப் பெற்று, ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுப்போம். கல்வியே ஆயுதம், கல்வியே கேடயம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சூர்யா.

Leave a Response