ஒரு பக்கம் மழை இன்னொரு பக்கம் அனல் – மாறுபடும் தமிழகம்

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் அனல் காற்று நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் தென்மேற்குப்பருவ மழை தொடங்கியது.

இதன் காரணமாக தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்பத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், இன்று கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சீபுரம், கடலூர், புதுச்சேரி மற்றும் உள்மாவட்டங்களான திருச்சி, சேலம், பெரம்பலூர், வேலூர் ஆகிய பகுதிகளில் அனல் காற்று தீவிரமாக வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் மழை இன்னொரு பக்கம் கடும் அனல் என்கிற மாறுபட்ட வானிலையில் தமிழகம் சிக்கியிருக்கிறது.

Leave a Response