நறுக்கென்று நாலு வார்த்தை – பாண்டேவுக்கு சுபவீ திறந்த மடல்

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், ரங்கராஜ் பாண்டேவுக்கு எழுதியுள்ள திறந்த மடல்……

அன்புள்ள திரு ரங்கராஜ் (பாண்டே) அவர்களுக்கு,

வணக்கம். ‘ஹிந்தி திணிப்பு உண்மையா?’ என்னும் தலைப்பில், சாணக்கியாவில் நீங்கள் ஆற்றியுள்ள உரையைக் காணொளி வடிவில் முழுமையாகப் பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்,’புரட்சி வெடிக்கும், கிளர்ச்சி வெடிக்கும்’ என்னும் குரல்கள் கேட்பதாக, ஒரு மெலிதான ஏளனத்துடன் தொடங்கும் அந்த உரை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்தத் திறந்த மடலை எழுதுகின்றேன்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டதும், அதன் பிறகு, 2017 ஜூன் மாதம் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதுமான செய்திகளையும், அவர்கள் இப்போது 484 பக்கங்களில் பரிந்துரை வழங்கியுள்ளனர் என்னும் செய்திகளையும் எல்லாம் கூறிவிட்டு, அந்த அறிக்கையை ‘நுனிப்புல்’ மேயாமல் ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று அறிவுரையும் கூறியுள்ளீர்கள்.

உங்கள் அறிவுரை சரிதான். நுனிப்புல் மேய்வது அறிவுக்கு ஏற்றதன்று. ஆனால், அந்த அறிக்கையைக் கூட, மத்திய அரசு, எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வகையில், அவரவர் தாய்மொழியில் கொடுக்கவில்லை. குறைந்தது, மும்மொழித் திட்டம் பற்றிப் பேசும் அந்த அறிக்கையை மூன்று மொழிகளில் கூடத் தரவில்லை. எந்த ஆங்கில மொழியை வேண்டாம் என்கின்றனரோ, அதே ஆங்கிலத்த்தில் மட்டும்தான் தந்துள்ளனர். அதனை எத்தனை இந்தியப் பாமர மக்களால் படித்துப் புரிந்து கொள்ள முடியும்? புரிந்து கொண்டு, ஒரே மாதத்தில் தங்கள் கருத்தை அரசிடம் பதிவு செய்ய முடியும்? தலைமுறை தலைமுறையாக ஆங்கிலம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள உங்களைப் போன்றவர்களுக்குத்தானே அதுவெல்லாம் எளிதாக இருக்கும். நாங்கள் பாமரர்கள், நுனிப்புல்தான் மேய வேண்டியிருக்கும். பிறகு உங்களைப் போன்ற சாணக்கியர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

போகட்டும், பிறகு மும்மொழிக் கொள்கை என்றால் என்ன என்று விளக்கிவிட்டு, 1968 முதல் தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருந்து வருவதைச் சுட்டியுள்ளீர்கள். இதன் பிறகுதான் உங்கள் கச்சேரி தொடங்குகிறது.

இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்ட ‘இந்த ஒரே காரணத்தினால்’ இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நவோதயா பள்ளிகளைத் தமிழகம் அனுமதிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கின்றீர்கள். இடையில் கல்வி அமைச்சராக இருந்த மாபா.பாண்டியராஜன் அதனைக் கொண்டுவர முயன்றதாகவும், அதுவும் பயனின்றிப் போய்விட்டதெனவும் கூறுகின்றீர்கள்.

நவோதயா பள்ளிகளைத் தமிழகம் மறுத்தது அந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமில்லை. நவோதயா பள்ளிகள் திட்டம், 1985 ஆகஸ்டில் முன்மொழியப்பட்டு, 1986 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல்வராக இருந்த எம்ஜிஆர் அதனை இங்கு மறுத்துவிட்டார். பிறகு 1992 முதல் ஜெயலலிதா அதனை நடைமுறைப்படுத்த முயன்றார். பரதநாட்டிய வகுப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதே அவரின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அவரால் அதனை இங்கு கொண்டுவர இயலவில்லை.

நவோதயா என்பது உண்டு, உறையும் பள்ளி என்பதும், அதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும் என்பதும், மாணவர்களுக்கு எல்லாம் இலவசம் என்பதும் உண்மைதான். ஆனால் அந்தப் பள்ளி ஒரு மாவட்டத்திற்கு ஒன்று மட்டுமே திறக்கப்படும். அந்தப் பள்ளியில் ஒரு வகுப்பில், இரண்டு பிரிவுகளில் 40 முதல் 80 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒரு மாவட்டத்தில் பல லட்சம் பிள்ளைகள் இருக்கும்போது, 80 மாணவர்களுக்கு மட்டும், இந்தியைக் கட்டாய பாடமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன், எல்லா உதவிகளும் அளிக்கப்படும். இது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆதி திராவிட நலப் பள்ளிகள், பழங்குடியினருக்கான பள்ளிகள் உள்ளன. கள்ளர் சமூக மக்களுக்கான மேம்பாட்டுப் பள்ளிகள் கூட உள்ளன. மத்திய அரசு, நவோதயா பள்ளிகளுக்கு வழங்க முன்வரும் 40 கோடி ரூபாய் பணத்தை எல்லா மாணவர்களுக்கும் பகிர்ந்து தரக் கூடாதா என்பதே நம் கேள்வியாக இருந்தது. இந்தி படித்தால் பணம் தருகிறேன் என்று சொல்வது, நம்மை விலைக்கு வாங்குவது ஆகாதா என்றே நாம் கேட்டோம்.

பிறகு கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.சி பள்ளிகளில் எல்லாம் இந்தி இல்லையா என்று கேட்கிறீர்கள். இந்தியா முழுவதும் மாற்றுப்பணிகளுக்கு உட்பட்டவர்கள் (transferable jobs) பிள்ளைகளுக்காக உருவாக்கப்பட்டவை அவை. ஆனால் இன்று, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாம், சிபிஎஸ்சி பள்ளிகள் ஆகிவிட்டன. 1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் 55 சிபிஎஸ்சி பள்ளிகள்தாம் இருந்தன. அம்மையார் முதல்வராக 2011இல் பதவியேற்றபின், அவற்றின் எண்ணிக்கை மளமள வென்று ஏறிற்று. இன்று இங்கு 941 பள்ளிகள் உள்ளன. இப்படி வணிகமயமாக்கியது யார் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டாமா?

இந்திப் பிரச்சார சபாவில் ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் இந்தி படிக்கின்றனர் என்று பெருமையோடு சொல்கின்றீர்கள். நன்றாகக் படிக்கட்டும். யார் வேண்டாமென்றது? இந்தித் திணிப்பை மட்டும்தான் நாம் எதிர்க்கிறோம்.

அடுத்ததாக, நெஞ்சறிய ஒரு பொய்யைக் கூறுகின்றீர்கள். 2015 வரையில், தமிழே படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் எல்லாப் படிப்பையும் படிக்கலாம் என்ற நிலைமை இருந்ததா இல்லையா என்று கேட்கின்றீர்கள். அதாவது ஜெயலலிதா அம்மையார் வந்தபிறகுதான். தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டது என்பது போன்ற உண்மைக்கு முற்றிலும் மாறான ஒரு செய்தியை நீங்கள் தருகின்றீர்கள். ‘எல்லாம் அறிந்த நீங்கள்’ 2006 ஜூன் மாதம், கலைஞர் ஆட்சியிலேயே, தங்கம் தென்னரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, முதல் வகுப்பு தொடங்கி தமிழ் அட்டாயப் பாடம் ஆக்கப்பட்டதை அறியவில்லை போலும் நீங்கள். அல்லது அதனைச் சொல்ல மனமில்லையோ என்னவோ!

சரி, முதன்மையான சிக்கலுக்கு வருவோம். இந்தி கட்டாயம் கற்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள். ஆனால் அதற்கு ஒரு ‘வியாக்கியானம்’ தருகின்றீர்கள். இந்தி பேசும் மாநிலங்களிலும், மும்மொழிக் கொள்கை உள்ளதே என்கிறீர்கள், அங்கே தாய்மொழி, ஆங்கிலம், ஏதேனும் ஓர் இந்திய மொழி என்றும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி என்று மூன்று மொழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அங்கே, இந்தியாவின் ஏதேனும் ஒரு மொழி, இங்கே இந்தி மட்டும்தான். மலையாளமோ, பஞ்சாபியோ படிக்க முடியாது. இதுதானே பரிந்துரை? இது எப்படிச் சமத்துவமாகும்? நமக்கும், ஏதேனும் ஒரு இந்திய மொழி மூன்றாவது மொழி என்று சொல்லியிருந்தால் சமத்துவம் இருக்கிறது. இங்கே இந்திதான். நமக்கு வேறு விருப்பம் தெரிவிக்கும் உரிமையில்லை. அவர்களோ, சமஸ்கிருதம், குஜராத்தி என்று எந்த ஒரு மொழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது என்ன நீதி?

எனவே கொல்லைப்புற வழியாக இந்தியை, அதன் தொடர்ச்சியாகப் பிற்காலத்தில் சமஸ்கிருதத்தைத் திணிப்பதுதான் இதன் நோக்கம். இதனைத் தமிழகம் ஒருநாளும் ஏற்காது, ஏற்கவும் கூடாது.

ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்திற்கும், தேவைக்கும், திறமைக்கும் ஏற்பக் கற்றுக் கொள்ளட்டும். யாரும் தடுக்கவில்லை. ஆனால் மொழிகளைக் கற்றுக் கொள்வது மட்டுமே அறிவாகாது. மொழி அறிவு சிறப்பானதுதான். எனினும், மொழியின் மூலம் பெறும் அறிவே அதனினும் சிறப்பானது.

ஏதேனும் ஒரு வழியில் இந்தியை, அதன் வழி சமஸ்கிருதத்தை ஏன் திணிக்க விரும்புகின்றார்கள், அதற்கு உங்களைப் போன்றோர் ஏன் துணை போகின்றீர்கள் என்பதைத் தமிழகம் அறியும். சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டு வல்லாண்மை.

அந்த ஆரியப் பார்ப்பன வல்லாண்மைக்குத் தமிழகம் என்றும் அடிபணியாது.

நன்றி ரங்கராஜ்! (முடிந்தால் அந்தப் பாண்டேயை விட்டுத் தொலையுங்களேன், அது நீங்கள் படித்து வாங்கிய பட்டமில்லையே)
#rangarajpandey #stophindiimposition #மும்மொழிகொள்கை

அன்புடன்
சுப. வீரபாண்டியன்

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response