கமல் மேடையிலிருந்து இறங்கிய பிறகு செருப்பு வீச்சு – நாடகம் நன்றாக நடக்கிறது

கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது….

நாளை (இன்று) நான் பேசவிருந்த கூட்டத்திற்கு தடைவிதித்து விட்டார்கள். இதனால் இன்று (நேற்று) உங்களைச் சந்திக்கிறேன். உங்களிடமே முடிவை விட்டு விடுகிறேன்.

இங்கு பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. நீங்கள் நேர்மையாக இவ்வளவுபேர் இங்கு கூடியிருக்கிறீர்கள். மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.எங்களால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இருந்தாலும் பாதுகாப்பு கொடுத்ததற்காக காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.

அதன்பின்னர் கமல் மேடையைவிட்டு கீழே இறங்கினார்.அவரை கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தசமயத்தில் மர்மநபர் ஒருவர் மேடையை நோக்கி செருப்பையும், முட்டையையும் வீசினார். அதற்குள் கமல் வாகனத்தில் ஏறிச் சென்று விட்டார்.

மர்ம நபரின் செயலால் ஆத்திரமடைந்த கமலின் கட்சி தொண்டர்கள் செருப்பு வீசியவரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.காவல்துறையினர் அவரைக் காப்பாற்றி அங்கிருந்த கடையின் முன்பகுதியில் அமர வைத்தனர். மேலும் அவரைத் தாக்காமல் சுற்றி நி்ன்று கொண்டனர்.

இதையறிந்த கமல் கட்சித் தொண்டர்கள் அங்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதையடுத்து கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் அதிரடிப் படையினருடன் அப்பகுதிக்கு வந்தார். கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் மேடை முன்பகுதியில் இருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கைபேசி விளக்கை எரியவிட்டபடி நின்று கொண்டிருந்தனர்.

இதனிடையே காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செருப்பு வீசிய நபர் மரவாபாளையம் பகுதியை சேர்ந்த பாஜ கட்சி தொண்டர் ராமகிருஷ்ணன் எவ்பது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வு பற்றி கமல் தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளதாவது,

மக்கள் நீதி மய்யம் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அன்பு வேண்டுகோள். நிகழும் சம்பவங்கள், நம் நேர்மைக்கும் பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை. ஆர்ப்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு வலிந்து இழுக்கும். மயங்காதீர். அவர்களின் தீவிரவாதம் நம் நேர்மை வாதத்திற்கு முன் தோற்கும். நாளை நமதே.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கமலை செய்திகளிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிற நாடகம் மிக நன்றாக நடக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response