பள்ளியிலேயே தமிழை ஒழிக்கும் முடிவு – தமிழறிஞர் கொதிப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியை மறைமுகமாக பாஜக நடத்தத் தொடங்கியது முதல், கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளை போன்று 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.

அதன்படி,

11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் மொழிப் பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 2 மொழிப் பாடங்களுக்குப் பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழிப் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கல்வித் துறையின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.

தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப் பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்; பிறமொழிதான் விருப்பம் என்பதே தாய்மொழி நியாயம். ஒரு மனிதனுக்குத் தாய் என்பவள் கட்டாயம்; மனைவி என்பவள்தான் விருப்பம். தமிழோடு ஆங்கிலம் என்ற அண்ணாவின் இருமொழிக் கொள்கைதான் தமிழர்களின் காலத்தேவையாக இருக்கிறது. தமிழை விருப்பப் பாடப்பட்டியலில் விட்டுவிட முடியாது. சுமையைக் குறைப்பதற்கான வழிமுறை மொழியைக் குறைப்பதுதான் என்கிறது பரிந்துரை. தலை கனமாக இருக்கிறது என்பதற்காகத் தலையைக் குறைக்க முடியுமா?

தொழிற்கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கல்வியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டாம்; இந்த விஷச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்துவிடுங்கள்.

தமிழில் இரண்டாம் தாள் வேண்டாம் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித்திறனும் இரண்டாம் தாளில்தான் வினைப்படுகின்றன. கண்களில் ஒன்றுபோதும் என்று ஒன்றைக் களைந்துவிடுவீர்களா? பள்ளிக் கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பதற்கு மாறாக அதன் அடிவேரில் அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.

தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும், அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன்முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

Leave a Response