சென்னையில் விட்டதை விசாகப்பட்டினத்தில் பிடித்த தோனி – ரசிகர்கள் மகிழ்ச்சி

12 ஆவது ஐபிஎல் தொடரின் 2 ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பங்கேற்றன.

மே 10 அன்று விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய பிரித்வி ஷா 5 ரன்களும், ஷிகார் தவான் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய காலின் மன்ரோ 27 ரன்களுக்கும், ரிஷப் பாண்ட் 38 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டு பிளஸ்சிஸ், வாட்சன் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதத்தைக் கடந்தனர்.

டு பிளஸ்சிஸ் 37 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த வாட்சனும் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்த சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆட்டநாயகனாக டு பிளஸ்சிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இறுதிப்போட்டித் தேர்வில், சென்னையில் தோற்ற சென்னை அணி விசாகப்பட்டினத்தில் வென்றது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Leave a Response