எழுவர் விடுதலை – பெருமையைத் தட்டிச் செல்லுமா திமுக?

28 வருடங்களாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை,உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டது.

கடந்த 8 மாதங்களாக முக்கியமான அந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் தேவையில்லாமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார்.

அதற்கு, 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில்,உச்சநீதிமன்றமே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பது, அவர்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை தோற்றுவித்திருக்கிறது.

அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் கீழ் முடிவு எடுக்க, ஆளுநருக்கு இனி எந்தத் தடையும் இல்லை.

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரை தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. திமுகவைப் பொறுத்தவரையில், சட்டமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடந்துள்ள 22 தொகுதிகளிலும் திமுக வெல்லும், அதன் காரணமாக கூட்டணிக்கட்சிகளின் துணையோடு திமுக ஆட்சி அமையும் என்று சொல்லிவருகிறார்கள்.

மே 23 க்குள் ஆளுநர் இந்த விசயத்தில் முடிவெடுக்காவிட்டால், திமுக ஆட்சி அமைந்தால் முதல் காரியமாக அமைச்சரவையைக் கூட்டி எழுவர் விடுதலை தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும்.அதை அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

ஏழு பேரும் விடுதலையாவர். பல்லாண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த அந்தச் சிக்கலைத் தீர்த்து அவர்களை விடுதலை செய்த பெருமையும் திமுகவுக்குக் கிடைக்கும்.

Leave a Response