எழுவர் விடுதலை விவகாரம் – சீமான் அறிக்கை

எழுவரின் விடுதலைக்கெதிரான வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக விடுதலைக்கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,….

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக் கொண்டிருக்கிற உடன்பிறந்தார்கள் எழுவரையும் விடுதலை செய்யக்கோரி 161 ஆவது சட்டப்பிரிவின்படி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி எட்டு மாதங்களை நிறைவுசெய்திருக்கிற நிலையில் அதற்கு ஒப்புதல் தராது காலந்தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் செயல் மாநிலத் தன்னாட்சி உரிமைக்கே முற்றிலும் எதிரானதென்று கூறி அவ்விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம்.

ஆனாலும், ஆளுநர் கள்ளமௌனம் சாதித்து விடுதலையை மறுத்து வருகிறார். தர்மபுரியில் மாணவிகளை எரித்த வழக்கிலுள்ள குற்றவாளிகளை விடுவிக்க அக்கறை காட்டி அதனைச் சாதித்துக் காட்டிய தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதென எண்ணி அலட்சியமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை எப்போதும் இல்லாத வழக்கமாக இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைக் கேட்கும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்து, அவர்கள் சார்பில் வழக்குத் தொடுத்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.

அந்த வழக்குகள் யாவும் தற்போது உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, இனியும் இவ்விடுதலையைத் தாமதப்படுத்துவதற்கு எவ்விதக் காரணமுமில்லை என்பது சட்டப்பூர்வமாகத் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக எழுவரையும் விடுதலைசெய்ய ஒப்புதல் தர வேண்டும் எனவும், அதற்குத் தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தங்களைக் கொடுத்து சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response