99 ரன்களில் டெல்லியைச் சுருட்டிய சென்னை – தோனி இம்ரான் அபாரம்

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 50 ஆவது லீக் போட்டி மே 1 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி சென்னை அணியின் சார்பில் டூ பிளஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர்.

இதில் வாட்சன் 0(9) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, டூ பிளஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

டூ பிளஸ்சிஸ் 39(41) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா தனது அரைசதத்தினை பதிவு செய்திருந்த நிலையில் 59(37) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக தோனி, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அதில் ஜடேஜா 25(10) ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி காட்டிய தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44(22) ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் ராயுடுவும் 5(2) ரன்னுடன் களத்தில் இருந்தார். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக சுஜித் 2 விக்கெட்டுகளும் , அக்‌ஷர் பட்டேல் மற்றும் மோரிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

பிரித்வி ஷா 4(5) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து ஷிகார் தவான் 19(13) ரன்களும், ரிஷாப் பாண்ட் 5(3) ரன்களும், கொலின் இங்கிராம் 1(5) ரன்களும், அக்‌ஷர் படேல் 9(9) ரன்களும், ரூதர் போர்டு 2(4) ரன்களும், கிரிஸ் மோரிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 44(31) ரன்களும், சுஜித் 6(15) ரன்களும், அமித் மிஸ்ரா 8(11) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் டிரண்ட் போல்ட் 1 ரன் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி 16.2 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், சாஹர், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

Leave a Response