ஐபிஎல் 12 சீசனில் அதிக ரன் எடுத்த கொல்கத்தா – மலைக்க வைத்த ரஸ்செல்

ஐ.பி.எல் 12 – மட்டைப்பந்தாட்டத் தொடரில் ஏப்ரல் 28 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய 47 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை கொல்கத்தா அணிகள் மோதின.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையைச் சுழற்றினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது.

இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2 ஆவது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்குப் பிறகு ரஸ்செல் தனது கைவரிசையைக் காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.

அடுத்து அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை அணி விழிபிதுங்கிபது. அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராகக் கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது.

இந்தத் தொடரில் தனது 4 ஆவது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

களம் இறங்கி விட்டால் ருத்ரதாண்டவமாடும் கொல்கத்தா வீரர் ஆந்த்ரே ரஸ்செல் (மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்தவர்) நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 50 சிக்சர்களை (12 ஆட்டம்) அடித்து இருக்கிறார். ஐ.பி.எல்.தொடர் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2 ஆவது வீரர் ரஸ்செல் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் இரண்டு முறை (2012-ம் ஆண்டில் 59 சிக்சர், 2013-ம் ஆண்டில் 51 சிக்சர்) இவ்வாறு சிக்சர் மழை பொழிந்திருக்கிறார்.

அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தைக் கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.

ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன் தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையைச் சாய்த்து இருக்கிறது.

கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150 ஆவது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3 ஆவது பந்துவீச்சாளர் ஆவார்.

கொல்கத்தாவின் அபார வெற்றிக்குக் காரணமான ஆந்த்ரே ரஸ்செல்லுடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மேலே உள்ள படத்தில் ரஸ்செல்லுடன் நடிகை ஜூகிசாவ்லா.

Leave a Response