விடுதலைப்புலிகள் இல்லாததால் இலங்கை பாதுகாப்பற்றதாகிவிட்டது – சிங்களம் கதறல்

ஏப்ரல் 21 ஆம் திகதி, சிறிலங்காவின் தென்பகுதியிலும், தமிழீழத்தின் தென்பகுதியிலும் இடம்பெற்ற கொடூரமான குண்டுத்தாக்குதலில் 300 ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ், சிங்கள மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களை தாமே செய்ததாக ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இதுவரை 10 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது.

இதில் 7 குண்டுகள் தற்கொலைக் கொலையாளி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறையை மேற்கோள் காட்டி களத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களிற்கு பின்னர், சிறிலங்கா குற்றத்தடுப்பு காவல் துறையினர், இதுவரை, 65 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். குண்டுகளை தயாரித்த இடம் ஒன்றையும் கொழும்பின் புறநகர் பகுதியில் கண்டு பிடித்துள்ளனர்.

இது ஒரு உலோகத் தொழிற்சாலை. இங்கு பணிபுரிந்த பன்னிருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். தாக்குதலாளிகள், 27 இடங்களில் ஓரே நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாகவும், இன்னோரன்ன காரணங்களால் பல இடங்களில் வெடிக்கவில்லை ஆகையால் பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பல அரசியல் பிரமுகர்களிற்கும், தாக்குதலாளிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற கோணத்திலும் புலனாய்வுகள் செல்கின்றன. சிஎன்என் போன்ற உலக செய்தி நிறுவனங்கள், சிறிலங்கா அரசு போன்றவை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளன.

இப்படித்தான் காலம் எப்போதுமே ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்பன் இல்லா விட்டால் தான் அப்பனின் அருமை தெரியும் என்பார்களே அது போல.விடுதலைப்புலிகளை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் கடல் வலயம் பாதுகாப்பற்றதாகி விட்டது என்பதை தற்போது சிங்கள ஏகாதிபத்தியம் வெளிப்படையாக பேசத் தொடங்கி விட்டது .

மேலும் இத்தாக்குதல்களை சாக்காக வைத்துக் கொண்டு, மேற்குலக புலனாய்வுக் கட்டமைப்புகளும், ஆசியாவின் புலனாய்வுக் கட்டமைப்புகளும் வந்திறங்கி விட்டன.

இனி வருங்காலங்களில், சிறிலங்காவானது, மேற்குலகின் கேந்திர நலன்களை நோக்கிய பரீட்சைக் களமாகவும், ஐஎஸ் ஐஎஸ் போன்ற அமைப்புக்களின் வஞ்சம் தீர்க்கும் புலமாகவும் மாறக்கூடும்.

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல, 30 ஆண்டுகளாக சொல்லொணாத் துயரினை அனுபவித்த எம் உறவுகள் மீண்டும் நிம்மதியின்றி தவிக்கப் போகின்றனர். இந்த வன்முறையில் பலியான அனைத்து உறவுகளின் துயரில் நாமும் பங்கேற்கிறோம். அமைதியும் சீரான நிலையும் உருவாக எல்லாம் வல்ல இயற்கையை வணங்குகின்றோம்.

Leave a Response