தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஏப்ரல் 21 ஆம் தேதி விருப்பமனு பெறப்பட்டது.
விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அன்றைய தினமே, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது.
கூட்டம் முடிந்தவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது.
இந்தக் கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 4 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து சம்பந்தப்பட்ட தொகுதி அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், எடப்பாடி பழனிசாமி இரவு 7.45 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் இரவு 7.55 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார்.
கட்சி தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணி முதலே ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் காத்து இருந்த போதும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவருமே எவ்வித பேட்டியும் அளிக்காமல் சென்றுவிட்டனர். 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், அறிக்கை மூலம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், இரவு 9 மணி வரையும் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் ராஜன்செல்லப்பா ஆகியோர் இடையே கருத்து வேறுபாட்டால் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறியே காரணம் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது என்கிறார்கள்.