192 என்கிற கடின இலக்கை எளிதாகக் கடந்த டெல்லி அணி

12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்தப் போட்டித் தொடரில் ஜெய்ப்பூரில் ஏப்ரல் 22 இரவு எட்டு மணிக்கு நடந்த 40 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் மட்டை பிடித்தது ராஜஸ்தான் அணி. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

2 ஆவது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (0) ரபடாவால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டு வெளியேறினார்.

இதனை அடுத்து அணித்தலைவர் ஸ்டீவன் சுமித், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து ரன் சேர்த்தனர். ரஹானே அடிக்கடி பவுண்டரி விளாசியதுடன், அவ்வப்போது சிக்சரும் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது. ரஹானே 32 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 10.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. 31 பந்துகளில் அரை சதத்தை தொட்ட ஸ்டீவன் சுமித் (50 ரன்கள், 32 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) அடுத்த பந்திலேயே கிறிஸ் மோரிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 13.1 ஓவர்களில் 135 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஸ்டீவன் சுமித் இணை 130 ரன்கள் திரட்டியது.

அடுத்து களம் கண்ட பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னுடனும், ஆஷ்டன் டர்னர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். அதிரடியாக ஆடிய ரஹானே 17-வது ஓவரில் சதத்தை (58 பந்துகளில்) பூர்த்தி செய்தார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இதுவாகும். ஐ.பி.எல். போட்டியில் ரஹானே அடித்த 2-வது சதம் இது. 2012-ம் ஆண்டு போட்டியில் அவர் முதல் சதத்தை (பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள்) அடித்து இருந்தார்.

இதனை அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (19 ரன்கள், 13 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ரியான் பராக் (4 ரன்) ஆகியோர் கடைசி ஓவரில் ரபடா பந்து வீச்சில் போல்டு ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. ரஹானே 63 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 54 ரன்னும் (27 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்),அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 42 ரன்னும் (39 பந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரூதர்போர்டு 11 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ரிஷாப் பான்ட் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்னும், காலின் இங்ராம் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

11 ஆவது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 7 ஆவது வெற்றி இது.

Leave a Response