கடைசி ஓவரில் பெங்களூருவை கதறவிட்டார் தோனி ஆனாலும்…

ஐ.பி.எல் 12 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21 இரவு பெங்களூரு சின்னசாமி அரங்கத்தில் 39 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதியது.

‘டாஸ்’ வென்ற சென்னை அணித் தலைவர் தோனி, முதலில் பெங்களூருவை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி (9 ரன்), தீபக் சாஹர் வீசிய ‘அவுட்ஸ்விங்’கரில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் (25 ரன், 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), அக்‌ஷ்தீப்நாத் (24 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் சிக்கினர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் அரைசதம் (53 ரன், 37 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் (5 ரன்), அடுத்து வந்த துணைத்தலைவர் சுரேஷ் ரெய்னா (0) இருவரின் விக்கெட்டையும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் எடுத்தார்.

மற்றொரு தொடக்க வீரர் பிளிஸ்சிஸ் (5 ரன்), கேதர் ஜாதவ் (9 ரன்) ஆகியோரை உமேஷ் யாதவ் வெளியேற்றினார். 28 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (5.5 ஓவர்) இழந்து திண்டாடிய சென்னை அணியை தோனியும், அம்பத்தி ராயுடும் இணைந்து காப்பாற்றினர்.

இந்த ஜோடி 5 ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. அம்பத்தி ராயுடு 29 ரன்களில் அவுட் ஆனார். இதன் பிறகு தோனி ஒரு பக்கம் போராட, மறுமுனையில் ஜடேஜா (11 ரன்), பிராவோ (5 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார்.

இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தோனி 2 மற்றும் 3 ஆவது பந்தை சிக்சர்களாக மாற்றினார். 4 ஆவது பந்தில் 2 ரன் எடுத்த அவர் 5 ஆவது பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டார்.

இதனால் கடைசிப் பந்தில் சென்னை அணிக்கு 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இந்த பந்தை எதிர்கொண்ட தோனி அடிக்கவில்லை. அது கீப்பர் பார்த்தீவ் பட்டேலின் கைக்குச் சென்றது. சென்னை வீரர்கள் ஒரு ரன் ஓட முயன்றனர். எதிர்முனையில் இருந்து ஓடி வந்த ஷர்துல் தாகூரை பட்டேல் சூப்பராக ரன்-அவுட் செய்தார்.

20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றியைப் பெற்றது.

தோனி 84 ரன்களுடன் (48 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார். தனது 3 ஆவது வெற்றியைப் பெற்ற பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. சென்னை அணிக்கு இது 3 ஆவது தோல்வி.

Leave a Response