மோசமான பேட்டிங் – எளிய இலக்கை தொட முடியாத ஐதராபாத்

ஐபிஎல் 12 – ஐதராபாத்தில் ஏப்ரல் 14 இரவு எட்டு மணிக்கு தொடங்கிய 30 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

டெல்லி அணியில் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடங்கினர். காயத்தில் இருந்து மீண்டுவந்த கலீல் அகமது, தொடக்க வீரர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். ப்ரித்வி ஷா, 4 ரன்களிலும் தவான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த முன்ரோ பவர் ப்ளே ஓவர்களில் அதிரடி காட்டினார். இதனால், 6 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது. முன்ரோ 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இளம் வீரர் அபிஷேக் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 4 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் – ரிஷப் பன்ட் ஜோடி விக்கெட் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் வண்ணம் விளையாடியது. இதனால் ரன் ரேட்டில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த ஜோடி 4 ஆவது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் பன்ட் 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே டெல்லி அணி ரன் குவிக்கத் தடுமாறியது.

இதனால், டெல்லி அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 116 ரன்களை மற்றும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

Leave a Response