தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மோடி அரசு — மருத்துவர் இராமதாசு கோபம்.

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்த சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத துரோகம் ஆகும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை…..

முல்லைப்பெரியாறு தொடர்பான வழக்கில் கடந்த 27.02.2006 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்தது. இதை எதிர்த்தும், முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக்கட்ட அனுமதி கோரியும் கேரள அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலிமையாக இருப்பதால் புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறிவிட்டது. அதேநேரத்தில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து முதலில் 142 அடியாகவும், பின்னர் பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட பிறகு 152 அடியாகவும் உயர்த்திகொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து கேரளா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டிய தேவையே இல்லை என்று பல்துறை வல்லுனர்களும், உச்சநீதிமன்றமும் கூறி விட்ட நிலையில், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு அனுமதி கோரியதும், புதிய அணைக்கான சுற்றுச்சூழல் ஆய்வை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததும் அதிர்ச்சி அளிக்கிறது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு முன்பாகவே கேரள அரசின் சார்பில் சுற்றுச்சூழல் ஆய்வு தொடங்கப்பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருக்கும்போதே, எந்த அடிப்படையில் மத்திய அரசு அவசர அவசரமாக அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.

மத்திய அரசின் இந்நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது. ஒருபுறம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கடமையை மத்திய அரசு நிறைவேற்ற மறுக்கிறது. மற்றொரு புறம் தேவையே இல்லாத அணைக்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி வழங்குகிறது. இவை இரண்டுமே தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகும். தமிழகத்தில் அரசியல் ரீதியாக சாதிக்க முடியாது என்பதால் மற்ற மாநிலங்களில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பாரதிய ஜனதா இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுகிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. தமிழக நலனுக்கு எதிரான இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
காவிரி, முல்லைப்பெரியாறு என தொடர்ந்து தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

இப்பிரச்சினைகளுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை கடமைக்கு மேற்கொள்ளாமல் தமிழகத்தின் எதிர்ப்பை கடுமையான வழிகளில் முதலமைச்சர் பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தின் ஆற்று நீர் உரிமையையும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக கூட்ட வேண்டும். இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு குரல் கொடுக்க வேண்டும்.

Leave a Response