சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப எது தடை? ஜெ அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றத்தில், லோக் சக்தா  கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெகதீசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை  நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்புவது இல்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிகழ்ச்சிகள் மட்டும் பெரும்பாலும் எல்லா ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகிறது. அதுவும் முழுவதும் தணிக்கை செய்யப்பட்ட செய்திகள்தான் வெளி வருகிறது. பெரும்பாலான  டி.வி.க்களிலும் அரசுக்கு ஆதரவான செய்திகள்தான் வருகிறது.

நாடாளுமன்றத்தில்,  இருஅவைகளிலும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பவது  போல தமிழக பேரவையின் நிகழ்வுகளும் ஒளிபரப்ப வேண்டும். சில மாநிலங்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை. எனவே, சட்டமன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசின் சட்டத்துறை சார்பாக  பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், ‘சட்டமன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. சட்டமன்ற தலைவரின் அதிகாரத்துக்குட்பட்டது’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப அனுமதிக்க முடியாது; சட்டமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது தனிப்பட்ட உரிமை என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் போது இதை பின்பற்ற முடியாது என்று தமிழக அரசு தெளிவாக கூறுகிறதா என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். நேரடியாக ஒளிபரப்ப அதிக செலவாகும். இதற்காக தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் தெளிவான முடிவை அடுத்த மாதம் 1ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். இதுதவிர நீதிபதிகள் கேள்வி எழுப்பும் போது, மக்கள் எந்த நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்று அரசு எப்படி முடிவு செய்ய முடியும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப எது தடையாக உள்ளது  என்றும் கேள்வி எழுப்பினர்.

Leave a Response