வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நீலகிரி தொகுதியில் யாருக்கு ஆதரவு – சீமான் அறிவிப்பு

நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 15 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் 9 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவார்கள்.

நாம் தமிழர் கட்சி சார்பில், ஊட்டி அருகே நஞ்சநாடு கக்கன்ஜி பகுதியை சேர்ந்த மணிமேகலை தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில்
நீலகிரி பாராளுமன்ற (தனி) தொகுதியில் படுக தேச பார்ட்டியின் சுயேட்சை வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

நீலகிரி தொகுதியில் போட்டியிட முடியாத சூழலில், நாம் தமிழர் கட்சி தனது உளமார்ந்த முழு ஆதரவை அத்தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கி இருக்கிறது.

நீலகிரி தொகுதியில் ஊன்றுகோல் ( கைத்தடி) சின்னத்தில் போட்டியிடும் படுகதேச பார்ட்டியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் திரு மா.சுப்ரமணி அவர்களின் வெற்றிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் பாடுபட வேண்டும்.

கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் படுகதேச பார்ட்டிக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி படுகதேச பார்ட்டியின் சுயேட்சை வேட்பாளர் மா.சுப்பிரமணி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response