தமிழிளைஞர்களுக்கு விடுதலைவெறி வந்துவிடக்கூடாது என்று சிங்களர்கள் செய்யும் சதி- அம்பலப்படுத்தும் விக்னேசுவரன்.

ஈழத்தில் 2009 போருக்குப் பின்னர், தமிழ் இளைஞர்களைச் சீரழிக்கும் விதமாகப் போதைப் பொருட்களை அதிக அளவில் உலவவிட்டுள்ளனர், சிங்களர்களின் திட்டமிட்ட இந்தச் செயலை அம்பலப் படுத்தும் விதமாக வடக்குமுதல்வர் விக்னேசுவரன் பேசியிருக்கிறார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் கொண்டாட்டம் யாழ் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

பலவித அரசியல், பொருளாதார, புலணுணர்வு சார்ந்த காரணங்களுக்காக எம்மிடையே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் போதைப் பொருள் விநியோகம், அதன் தாற்பரியம் பற்றி இங்கு கூறுவது பொருத்தம் என்று நம்புகின்றேன். எமது மாணவச் செல்வங்கள் கூட்டமாகக் கூடும் இப்பேர்ப்பட்ட இடங்களில்த்தான் அவர்களுக்கு எச்சரிக்கும் வண்ணம், எது உண்மை என்று எடுத்தியம்பும் வண்ணம், எங்கள் எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் சில வார்த்தைகள் பேசுவது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன். மனமகிழ்வுடன் கூடியிருக்கும் உங்கள் மத்தியில் மயக்குப் பொருட்கள் பற்றி முறையிடுகின்றேன் என்று எண்ணாதீர்கள். உங்களைச் சுற்றி அபாயம் காத்திருக்கின்றதை எடுத்தியம்புகின்றேன்.

அரசியல் ரீதியாக ஏன் இந்தப் போதைப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றீர்கள்? அதன் பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் உண்டு என்பது எனது கருத்து. எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி ஒரு காலத்தில் அரசாங்கங்களையே ஆட்டிப் படைத்து வந்துள்ளனர். வெளிநாட்டு உதவியுடன் பெருத்த செலவுடன்தான் அவர்களை அழிக்க முடிந்தது அப்போதிருந்த அரசாங்கத்தால். இனியுந் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேரக்கூடாது; ஒருமித்துச் செயலாற்றக் கூடாது; கல்வியில் சிறந்து விளங்கக் கூடாது; சுதந்திர எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக்கூடாது, விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து விட்டு எழக் கூடாது, அவர்களை நடைப் பிணங்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் சில அதிகார பீட அலுவலர்களிடமும் அரசியல் வாத அமைச்சர்களிடமும் எழுந்தது. வடகிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை அழித்தொழித்து விட்டோம். ஆனால் மீண்டும் அவர்கள் எழமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாகவே போதைப் பொருட்களைத் திட்டமிட்டு அறிமுகஞ் செய்ய முன்வந்தார்கள் என்பது எனது கருத்து.

தமிழ் இளைஞர்கள் அதற்கு அடிமையாகித் தமது சுயநினைவையும், சுய மரியாதையையும், சுய சிந்தனைகளையும் மறந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். ஆகவே எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகஞ் செய்யப் பாரிய ஒரு அரசியல்க் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும். விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும்.

 

Leave a Response