தோனியுடன் மோதுகிறார் விராட்கோலி – இன்று தொடங்குகிறது ஐபிஎல்

12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்தாட்டப் போட்டி இன்று (மார்ச் 23,2019) தொடங்குகிறது. மே 2 ஆவது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குத் தகுதி பெறும்.

தொடக்க லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) களம் இறங்குகின்றன.

இரவு 8 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்தப்போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மொத்தம் 38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியைக் காண முடியும். இதில் மூன்று கேலரிகள் முடக்கப்பட்டதன் காரணமாக இருக்கையின் எண்ணிக்கை 26 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

நடிகர், நடிகைகளின் நடனம், கலை நிகழ்ச்சி என்று ஐ.பி.எல். தொடக்க விழா கோலாகலமாக நடைபெறுவது உண்டு. ஆனால் இந்த முறை காஷ்மீரின் புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவிடும் வகையில் ஐ.பி.எல். தொடக்க விழா இரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடக்க விழாவிற்குரிய செலவுத் தொகை ரூ.20 கோடியை, உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தொகை இன்று இராணுவ அதிகாரிகளிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வழங்கப்படுகிறது இதே போல் தொடக்க ஆட்டத்தில் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானமும் நலநிதிக்கு அளிக்கப்படுகிறது. இதையொட்டி இராணுவத்தின் சார்பில் பேண்ட்வாத்தியம் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

Leave a Response