இந்த ஆண்டு இறுதியிலேயே தமிழகத்தில் பொதுத்தேர்தல்- திமுக தலைவர் தகவல்.

 

அதிமுக ஆட்சியினரை விட்டுக்கு விரட்ட தமிழ்நாட்டு வாக்காளர்கள் தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதியின் 92-வது பிறந்த நாள் விழா வரும் 3-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி திமுகவினருக்கு பிறந்த நாள் செய்தியை கருணாநிதி வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த ஆண்டு தான் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் ஆண்டு என்ற போதிலும் இந்த ஆண்டு இறுதியிலேயே பொதுத் தேர்தல் வரக்கூடும் என்று செய்தி உலா வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்காக செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்கள் முன்பு கொண்டு செல்லவேண்டும், மேலும் தமிழ்ச் சமுதாயத்துக்காக ஆற்ற வேண்டிய பணிகளை திட்டமிட்டு முறையாக செய்திட வேண்டும் என்று திமுக தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல கடந்த 4 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பட்ட துன்பங்களை எல்லாம் மக்களிடம் விளக்கிட வேண்டும் கருணாநிதி கூறியுள்ளார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சி பணத்தை விநியோகிக்க காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணத்தால் எதையும் சாதிக்க நினைப்பவர்களை எதிர்கொள்ள தக்க மனவலிமை பெற்றவராக திமுகவின் வேட்பாளர் இருந்தாக வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் யார் வேட்பாளர் என்பதைவிட தி.மு.கழகம் தான் வேட்பாளர் என்ற திடம் சித்தம் தான் திமுகவினர் ஒவ்வொருவருக்கும் இருந்திட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற திட்டமிட்டு பணியாற்ற திரண்டு வருமாறு கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்தல் நிதியாக இதுவரை 6 கோடியே 81 லட்சம் ரூபாய் சேர்த்துள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.

Leave a Response