இரும்பு மனிதராக இருந்தால் இதுதான் கதி – அத்வானி நிலை பற்றி விமர்சனம்

2019 ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதிவரை மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் முதல் கட்ட 184 வேட்பாளர்கள் நேற்று (மார்ச் 21) அறிவிக்கப்பட்டனர்.

இதில் பாஜக மூத்த தலைவரும், 91 வயதான எல்கே அத்வானிக்கு காந்திநகர் தொகுதி வழங்கப்படவில்லை. கடந்த 1998 ஆம் ஆண்டில் இருந்து அத்வானி இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். ஆனால், இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்காமல் அந்தத் தொகுதியில் அமித்ஷா போட்டியிட உள்ளார்.

1990 களில் ரதயாத்திரை நடத்தி நாடு முழுவதும் பாஜகவை தெரிய வைத்தவர் எல்கே அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலில் காந்திநகரில் அத்வானி போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு 1996 தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் வாஜ்பாய் போட்டியிட்டு வென்றிருந்தார். அவர் உத்தரப்பிரதேசம் லக்னோ தொகுதிக்கு மாறியபின், 1998 ஆண்டுமுதல் காந்திநகரில் போட்டியிட்டு அத்வானி வென்றுள்ளார்.

கடைசியாக கடந்த 2014 ஆண்டு மக்களவைத் தேர்தலில் காந்திநகரில் போட்டியிட்ட அத்வானி, 4.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனால், காந்திநகர் தொகுதியில் இந்த முறையும் அத்வானி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைந்து மதக்கலவரங்கள் அதிக அளவில் நடக்கக் காரணமாக இருந்தவர் அத்வானி.

அவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று பாஜகவினர் கொண்டாடினார்கள். இப்போது அவர்களே அவரை அனாதையாக விட்டுவிட்டனர்.

தெம்பாக இருந்த காலத்தில் இரும்பு மனிதராக நடக்காமல் நல்லமனிதராக இருந்திருந்தால் வாழும் காலத்திலேயே இவ்வளவு மோசமான அவமானங்களைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை என்று சொல்கின்றனர்.

இன்று அத்வானி, நாளை மோடி அமித்ஷா என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response