மாசு என்கிற மாசிலாமணி — விமர்சனம்.

மாஸ் என்றழைக்கப்படுகிற சூர்யா ஒரு திருடன். அவருக்குத் துணை பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டு வேலையில் பெரியஇடத்துப் பணத்தில் கைவைத்துவிடுகிறார்கள்.  பணத்தைப் பறிகொடுத்தவர்கள் துரத்துகிறார்கள் காரொன்றில் தப்பித்துப்போகும் நேரத்தில் பெரியவிபத்து. அந்த விபத்து சூர்யாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது.
அந்தவிபத்தில் உயிர்பிழைக்கும் சூர்யாவின் கண்களுக்கு ஆவிகள் தெரியத்தொடங்குகின்றன. உடனே ஆவிகளை துணைக்கு வைத்துக்கொண்டு பேய்ஓட்டும் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார். ஒருகட்டத்தில் சூர்யாவின் உருவத்திலேயே ஒரு ஆவி வந்துவிடுகிறது. அதன்பின் திரைக்கதையிலும் அதற்குள் சூர்யாவின் மனத்திலும் பல மாற்றங்கள்.
மாஸ். சக்தி ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் சூர்யா நன்றாகச் செய்திருக்கிறார். மாஸ் பாத்திரத்தில் ஆவிகள் கண்களுக்குத் தெரிந்தவுடன் பதறுகிறார்.  நயன்தாராவைப் பார்த்தவுடன் காதல்கொண்டு வழிகிறார்,  சக்தி என்கிற ஈழத்தமிழர் பாத்திரத்தில் பாசம் காட்டுகிறார், அநீதிகண்டுபொங்குமிடத்தில் கம்பீரம் காட்டுகிறார்.
நயன்தாரா நர்ஸாக நடித்திருக்கிறார். அவருக்குப் படத்தில் பெரிதாக வேலையில்லை. தொடக்கத்தில் சும்மா வந்துபோகிறவராகவே இருக்கிறார். அவர் நர்ஸாக இருப்பதால் ஓரிடத்தில் கதைக்கு மிகவும் பயன்பட்டிருக்கிறார். இன்னொரு நாயகி பிரணிதா, திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் சூர்யாவைப் பின்தொடர்ந்து கல்யாணம் செய்துகொள்ளும் வேடம். தன் பெரியகண்களால் நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்.
படத்தின் முதல்காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை சூர்யாவுடனேயே இருக்கிறார் பிரேம்ஜி. கொஞ்சநேரம்தான் அவர் மனிதர். அதன்பின்னர் பாத்திரம் மாறிவிட்டாலும் அவருடைய சேட்டைகள் எல்லா நேரத்திலும் ஒரேமாதிரியாக இருந்து சிரிக்கவைக்கின்றன. மங்காத்தாவுக்கப்புறம் இப்பதான் இவ்வளவு பணத்தைப் பார்க்கிறேன், ஆண்டனி தெரியுமா? என்று சூர்யாவிடம் கேட்கும்போது எடிட்டர்ஆண்டனியைத் தெரியும்னு சொல்லு என்பது உட்பட பல இடங்களில் திரைரயங்கில் சிரிப்பொலிகளை ஏற்படுத்துகிறார். நான் செத்துவிட்டேனா என்று அவர் கேட்கும்போது கூட சோகத்திற்குப் பதில் சிரிப்பதான் வருகிறது.
காவல்துறைஅதிகாரியாக பார்த்திபன், பெரியதொழிலதிபராக சமுத்திரக்கனி, மத்தியஅமைச்சராக ஜெயப்பிரகாஷ், நிறைவேறாத ஆசைகளைக் கொண்ட ஆவிகளாக கருணாஸ், ஸ்ரீமன், நான்கடவுள்ராஜேந்திரன் உட்பட பலர் என்று படத்தில் நிறையநடிகர்கள் கூட்டம். எல்வோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நான் வந்தும் ஒண்ணும் புடுங்கலன்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல என்கிற பார்த்திபனின் இயல்பான குசும்புகள் இந்தப்படத்திலும் இருக்கின்றன.

ஆவிகளின் முன்கதை மற்றும் அவற்றினுடைய ஆசைகளை சூர்யா நிறைவேற்றி வைக்கிற காட்சிகளில் சமுகத்தில் தற்போது நடக்கும் பல அவலங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத்தேவைகள் கூட பெரியஆசை போல மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆசைகள் நிறைவேறியதும் ஆவிகள் உதிர்ந்துபோகும் காட்சிகளின் மூலம் மக்களுக்கு எதையோ இயக்குநர் உணர்த்தியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
வெங்கட்பிரபுவின் நண்பர்களெல்லாம் ஏதாவதொரு ரூபத்தில் படத்துக்குள் வந்துவிட்டார்கள். எங்கேயும்எப்போதும் பட கதாபாத்திரமாகவே ஜெய் ஒரு காட்சியில் வருகிறார்.
சொந்தநாடு மற்றும் வீட்டைவிட்டுவிட்டு இன்னொரு நாட்டுக்குப் போய் பிழைக்கிறவனின் வலி தெரியுமா? என்று சூர்யா பேசுவதன் மூலம் ஈழத்தமிழர்களின் வலிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். செய்திருக்கிறார்கள்.

Leave a Response