2019 நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ மார்ச் 10 மாலை அறிவித்தார்.
17 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.
அன்றைய தினமே காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்றார்.
இந்த அறிவிப்பு வெளியான சிறிதுநேரத்தில், தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பில் அவர் கூறியதாவது…
தமிழகத்தில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நிலக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.கே.போசை(இவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறந்து போனார்) எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் என்பவரும், ஓட்டப்பிடாரம் தொகுதியைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுந்தர்ராஜனை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமியும், அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்பாலாஜியை(இவர், தற்போது தி.மு.க.வில் உள்ளார்) எதிர்த்து தேசிய மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த ஏ.பி.கீதா என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த 3 தொகுதிகளுக்கு மட்டும் தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது. மற்ற 18 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணைப்படியே இடைத்தேர்தலும், ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலுக்கு தேவையான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தயார்நிலையில் உள்ளன. பதட்டமான தொகுதிகள் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.
அதுபோன்ற தொகுதிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். வேட்புமனு தாக்கல் முடிவு பெறும் நாளில் இருந்து 10 நாட்களுக்கு முன்னதாக துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தலுக்கு முன்னதாக புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
200 துணை ராணுவப்படை கம்பெனிகள் பாதுகாப்புக்காக கோரி உள்ளோம். முதற்கட்டமாக 10 துணை ராணுவப்படை கம்பெனிகள் விரைவில் வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ள ஏப்ரல் 18 ஆம் தேதி தென் தமிழகத்தில் இரு முக்கியமான நிகழ்வுகள் இருக்கின்றன. ஒன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருத்தேர். மற்றொன்று, கள்ளழகருக்கு எதிர்சேவை. இரண்டிலும் இலட்சோபலட்சம் மக்கள் பங்கு பெறுவார்கள். ஏப்ரல் 8 முதல் 22ஆம் தேதிவரை சித்திரத் திருவிழா மதுரையில் நடக்கிறது.
அந்தச் சமயத்தில் தமிழகத்தில் தேர்தல் நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்யப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ‘இதுகுறித்து பரிசீலனை செய்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்’ என்று சத்யபிரதாசாகு பதில் அளித்தார்.
இதனால் தமிழகத்தில் தேர்தல் தேதி மாற்றப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.