இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய மட்டைப்பந்தாட்ட அணி.
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3 ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியைப் பந்து வீசுமாறு பணித்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா,ஷிகர் தவான் ஜோடி அபார தொடக்கம் தந்தது. இருவரும் எதிரணி பந்துவீச்சைச் சிதறடித்தனர். ரோகித் அரை சதம் கடந்தார். இவர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் ஒரு நாள் அரங்கில் 16 ஆவது சதம் அடித்தார். இவர் கம்மின்ஸ் பந்தில் 143 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணித் தலைவர் விராட் கோலி (7), லோகேஷ் ராகுல் (26) ஓட்டங்கள் எடுத்தனர். ரிஷாப் (36) வெளியேறினார். விஜய் சங்கர் 26 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் (1), சகால் (0) விரைவில் திரும்ப, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ஓட்டங்கள் எடுத்தது. குல்தீப் (1), பும்ரா (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
புவனேஷ்வரின் முதல் ஓவரில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் பின்ச் டக் அவுட்டானார். ஷார் மார்ஷ் (6) ஜொலிக்கவில்லை. கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். கவாஜா 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஹேண்ட்ஸ்கோம்ப் சதம் விளாசினார். குல்தீப் ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (23) சிக்கினார். பின் வந்த டர்னர் அரை சதம் கடந்தார். அலெக்ஸ் கேரி (21) அவுட்டானபோதும், வெற்றியைத் தடுக்க முடியவில்லை.
முடிவில், ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 359 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
டர்னர் (84) அவுட்டாகாமல் இருந்தார். இதனையடுத்து, தொடர் 2-2 என சமநிலையை எட்டியுள்ளது.
ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி மார்ச் 13 ஆம் தேதி தில்லியில் நடக்கவுள்ளது.
இரண்டு அணிகளும் சமநிலையில் இருப்பதால் ஐந்தாவது போட்டி பெரிய முக்கியத்துவம் பெறுகிறது.