அம்பேத்கரும் பெரியாரும் வெறும் அரசியல்தலைவர்கள் அல்லர்– ஸ்மிருதிராணிக்கு வலுக்கும் கண்டனம்

சென்னை ஐஐடியில் உள்ள மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கல்வி கற்கும் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதா?’ என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்தி தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
“இந்த விவகாரத்தில் நுனிப்புல்லை மேய்ந்த கதையாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையும் அதன் அமைச்சர் ஸ்மிருதி இரானியும் செயல்பட்டுள்ளது கண்டிக்கத்தது.
அம்பேத்கரும் பெரியாரும் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல; அவர்கள் இந்நாட்டில் பல சீர்திருத்தங்கள் ஏற்படக் காரணமான சமூக சீர்திருத்தவாதிகள். அவர்களின் கொள்கையை ஒரு பிரிவு மாணவர்கள் ஆதரிப்பதை பொறுக்க முடியாமல், அனாமதேய கடிதத்தின் அடிப்படையில் முறையான விசாரணையின்றி அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்ய சென்னை ஐஐடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருக்கும் ஸ்மிருதி இரானியின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல.
கல்வியில் காவி மயத்தை புகுத்த ஏற்கெனவே அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இந்நிலையில், மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கல்வி கற்கும் மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலுக்கு ஸ்மிருதி இரானி துணை போவதை அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் கட்சி, அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார் டி. ராஜா.

Leave a Response