பாகிஸ்தான் இராணுவம் நல்லமுறையில் நடத்தியது – பிடிபட்ட விமானியின் பேச்சால் நிம்மதி

பிப்ரவரி 26 அன்று காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது.

இதனால் அதில் இருந்த சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். விமானம் விழுந்த பகுதியில் இருந்தவர்களால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்ட அவரை பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் மீட்டனர்.

இதுபற்றி பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறுகையில், இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த விமானி தங்கள் காவலில் இருப்பதாகவும், ஜெனீவா மாநாட்டு ஒப்பந்தத்தின்படி அவர் நடத்தப்படுவார் என்றும் தெரிவித்தார்.

(போர்க்கைதிகளை துன்புறுத்தாமல், அவமதிக்காமல், மிரட்டாமல் சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஜெனீவா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் ஆகும்)

அபிநந்தனின் கண்கள் மற்றும் கைகளை பின்புறமாகக் கட்டி பாகிஸ்தான் இராணுவத்தினர் அழைத்துச் செல்வது போன்ற காட்சி வெளியானது.

பின்னர், அபிநந்தனுடன் பாகிஸ்தான் இராணுவ அதிகாரி நடத்திய உரையாடல் அடங்கிய பரபரப்பான மற்றொரு காணொலி காட்சியையும் அந்த நாட்டு இராணுவம் வெளியிட்டது.

அந்த காணொலியில், ஒரு கும்பல் மற்றும் இராணுவ வீரர்களிடம் சிக்கிய தன்னை இராணுவ அதிகாரி ஒருவர் மீட்டு அதிகாரிகள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றதாக அபிநந்தன் தெரிவித்து உள்ளார்.

அபிநந்தனின் முகத்தில் இரத்தக்கறையுடன் காயங்கள் இருந்ததால் அவர், தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அந்த உரையாடல் விவரம் வருமாறு:–

பாகிஸ்தான் இராணுவ அதிகாரி:– உங்களை எப்படி நடத்தினார்கள்?

அபிநந்தன் பதில்:– நல்ல முறையில் நடத்தினார்கள். பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கை என்னைக் கவர்ந்து இருக்கிறது. நான் எனது தாய் நாட்டுக்குத் திரும்பிச் சென்ற பிறகும் இதையேதான் கூறுவேன். எனது கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். எங்கள் இராணுவமும் இதேபோல் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ராணுவ அதிகாரி:– இந்தியாவில் நீங்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?

அபிநந்தன்:– தென் இந்தியாவைச் சேர்ந்தவன்.

ராணுவ அதிகாரி:– நீங்கள் திருமணம் ஆனவரா?

அபிநந்தன்:– ஆம். எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

ராணுவ அதிகாரி:– நீங்கள் குடித்துக் கொண்டிருக்கும் டீ நன்றாக இருக்கிறதா?

அபிநந்தன்:– மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி.

ராணுவ அதிகாரி:– நீங்கள் ஓட்டி வந்த விமானம் என்ன ரகம்?

அபிநந்தன்:– என்னை மன்னிக்கவேண்டும் மேஜர். நான் அதை உங்களிடம் சொல்லாவிட்டாலும், சிதறிய பாகங்களை வைத்து நீங்கள் அதை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று எனக்கு தெரியும்.

ராணுவ அதிகாரி:– உங்களுடைய நோக்கம் என்ன?

அபிநந்தன்:– மன்னிக்க வேண்டும். அதை நான் உங்களிடம் சொல்லக்கூடாது.

இவ்வாறு அந்த காணொலியில் உரையாடல் இடம்பெற்று உள்ளது.

விமானி அபிநந்தனை விடுவித்து பத்திரமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக் கொண்டு உள்ளது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது நச்சிகேட்டா என்ற இந்தியா விமானப்படை விமானி பாகிஸ்தான் இராணுவத்திடம் பிடிபட்டார். இந்தியா மேற்கொண்ட தீவிர முயற்சியை தொடர்ந்து, 8 நாட்களுக்குப் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அவரை இந்தியாவிடம் பாகிஸ்தான் திரும்ப ஒப்படைத்தது.

அதேபோல் விமானி அபிநந்தனும், விரைவில் விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் மூளுமோ என்கிற பதட்டம் இருந்த நேரத்தில் இந்திய விமானி பாகிஸ்தானிடம் பிடிபட்டார். அதனால் பதட்டம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இந்தியவிமானி பேசிய காணொலி வெளியானதால் நிம்மதி ஏற்பட்டிருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.

Leave a Response