சர்வதேச தரவரிசை ரோகித் சர்மா அபார முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா ஆகியோர் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி ஆட்டத்தில், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குல்தீப் அசத்தியதால், 728 புள்ளிகள் பெற்று பந்துவீச்சாளர்கள் வரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் குல்தீப்பின் உயர்ந்த அளவு முன்னேற்றமாகும். மற்றவகையில் முதல் 10 இடங்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஒருவரும் இடம் பெறவில்லை. யஜுவேந்திர சாஹல் 6 இடங்கள் பின்தங்கி 17-வது இடத்திலும், புவனேஷ்குமார் 18-வது இடத்திலும் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உள்ளார்.

3-ம் இடம் முதல் 10-ம் இடங்கள் வரை முறையே, சதாப் கான்(பாக்), இமாத் வாசிம் (பாக்), அதில் ரஷித்(இங்கி), சகிப் அல் ஹசன்(வங்க), ஈஷ் சோதி(நியூசி), பாகிம் அஷ்ரப்(பாக்), சான்ட்னர்(நியூசி.) ஆகியோர் உள்ளனர்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி, 7-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். கே.எல்.ராகுல் 10-ம் இடத்துக்கு பின்னடைந்துள்ளார். ஷிகர் தவண் 11-வது இடத்தில் நீடிக்கிறார்.

முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் உள்ளார். 2-ம் இடம் முதல் 6-ம் இடம் வரை முறையே கோலின் முன்ரோ, ஆரோன் பிஞ்ச், எவின் லூவிஸ், மேக்ஸ்வெல், பக்கர் ஜமான் ஆகியோர் உள்ளனர். 8-ம் இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ், 9-வது இடத்தில் ஜேஸன் ராய் இடம் பெற்றுள்ளனர்.

விராட் கோலி டி20 தொடரில் இடம் பெறாததால், 19-வது இடத்தில் ஜிம்பாப்வே வீரர் மசகாட்சாவுடன் உள்ளார்.

டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசி, பேட் செய்த குர்னல் பாண்டியா, 39 இடங்கள் முன்னேறி, 58-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் 12-வது இடத்திலும், ராஸ் டெய்லர் 51-வது இடத்திலும் உள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் 135 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 124 புள்ளிகளுடன் இந்திய அணி 2-ம் இடத்திலும் 118 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும்,118 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4-ம் இடத்திலும் உள்ளன.

ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் நியூசிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன. மேற்கிந்தியத்தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் முறையே 7 முதல் 10 இடங்களில் உள்ளன.

Leave a Response