தமிழகத்தின் கடன்சுமைக்கு மோடி அரசே காரணம் – பட்ஜெட்டில் போட்டுடைத்த ஓபிஎஸ்

மோடி அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி மற்றும் 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதை, பிப்ரவரி 8,2019 அன்று வெளியிடப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக நிதிநிலை அறிக்கை உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது….

நிதி ஆதாரங்களைப் பெருக்க திறன்மிகு வரி நிர்வாக அமைப்பு அவசியம். இதை உணர்ந்து, மாநிலத்தின் நிதி மேலாண்மையை மேம்படுத்த மின் ஆளுமை முயற்சிகளை அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநில கருவூலத் துறையின் நடவடிக்கைகளை மனிதவள தரவுகளுடனும், வரவு செலவுத் திட்டத்துடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்த நாட்டிலேயே முதல் முறையாக ‘ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிவைத்த இத்திட்டம், வரும் ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் கணினி வழியில் செயல்படுத்தப்படும்.

வரி செலுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் வணிக வரித் துறையால் செயல்படுத்தப்படும் ‘முழுமையான தீர்வுத் திட்டம்’ உறுதி செய்யும்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் வணிக வரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியதால் மாநிலங்களின் வரி விதிப்பு அதிகாரங்கள் குறைந்து, வரி வருவாய் ஈட்டும் திறனும் குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு, இணையத்தில் படிவங்களைத் தாக்கல் செய்வதில் நிலவும் சிக்கல், ஜிஎஸ்டியில் மாநில அரசின் பங்கு மற்றும் இழப்பீட்டை வழங்குவதில் மத்திய அரசு காட்டும் தாமதம் ஆகியவை தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பெரும் சவாலாக உள்ளன.

14 ஆவது நிதிக்குழு காலத்தில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு 32 இல் இருந்து 42 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆனால், மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில் தமிழகத்துக்கான பங்கு 9 ஆவது நிதிக்குழு பரிந்துரையான 7.931 விழுக்காட்டில் இருந்து 14-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.023 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான நிதிப் பகிர்வில் 14 ஆவது நிதிக்குழு நடுநிலையான, நியாயமான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அளிக்கும். அதன்மூலம், கடந்த காலங்களில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி சரிசெய்யப்படும் என்று மாநில அரசு நம்பிக்கையுடன் உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்கு 2018-19-ல் ரூ.30 ஆயிரத்து 638 கோடியே 87 லட்சமாகவும், 2019-20-ல் ரூ.33 ஆயிரத்து 978 கோடியே 47 லட்சமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

14 ஆவது நிதிக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பிறகு, மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில் தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது. இதனால் மாநில அரசின் நிதிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில்
2019-20 இல் மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.25 ஆயிரத்து 602 கோடியே 74 இலட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையிலேயே மோடி அரசு மீது வெளிப்படையாகக் குற்றம் சொல்லியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response