ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு – பழ.நெடுமாறன் சீமான் புகழ்வணக்கம்

தமிழருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

முதுபெரும் சோசலிசத் தலைவர் ஜாா்ஜ் பெர்னாண்டஸ் காலமான செய்தி அறிந்து அளவற்றத் துயரம் அடைந்தேன். இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக அவர் இருந்தபோதும், பதவியில் இல்லாத போதும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு முழுமையான ஆதரவுத் தெரிவித்ததோடு, ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் நூல்களையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற ஈழத் தமிழர் ஆதரவு மாநாடுகளில் கலந்துகொண்டார்.

1997ஆம் ஆண்டு தில்லியில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அகில இந்திய மாநாடு ஒன்றினை மிகச் சிறப்பாக பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் நடத்தினார். அகில இந்தியத் தலைவர்கள் பலரும், இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதிகளும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்கள். அந்த மாபெரும் தலைவருக்கு உலகத் தமிழர்களின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு சீமான் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில்….

மத்திய அமைச்சராய் இருந்து கொண்டு இலங்கையில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஆதரிக்கிறீர்களே என்று கேட்ட பொழுது “நான் உலகில் நடைபெறும் அனைத்து விடுதலை போராட்டங்களுக்கும் நண்பன்” என்று அறிவித்த சமதா கட்சி நிறுவனர், தமிழர்களின் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். ஆதிக்க எதிர்ப்பாளராக கடைசிவரை கொள்கையோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

1997யில் தனது அலுவலகத்தில் வைத்து புலிகளின் ஆதரவு கூட்டம் நடத்தியும், விடுதலைப்புலிகளின் ஈழ விடுதலை போராட்டத்திற்குப் பல்வேறு தருணங்களில் தார்மீக ஆதரவை தனது பேச்சாலும் செயலாலும் நல்கிய அப்பெருமானுக்கு நாம் தமிழர் கட்சி தனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Response