கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடும் ஆஸ்திரேலியாவும் விளையாடட்டும்

இந்தியா ஒரே தேசமல்ல; அது பல தேசங்களின் கூட்டமைப்பு/ஒன்றியம்.

ஒவ்வொரு தேசமும் மொழி, பண்பாடு, ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் வாழிடம், வாழிடம் சார் தொழில்கள் என தங்களுக்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கின்றன.

ஆனால் தேசங்களின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் நோக்கில் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே மதம் என்னும் ஆதிக்கத்தைச் செலுத்தத் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது மைய அரசு, ஒன்றிய அரசு என்பதே சரி.

ஒன்றியத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் என இரண்டிற்கும் ஒரே எண்ணம்தான். ஒட்டுமொத்த அதிகாரத்தையும் டெல்லியில் குவிக்கவே முயல்கின்றன இரு கட்சிகளும்.

இந்த நிலையில்தான் மாநில உரிமைகளைப் பற்றிய புரிதலை எட்டியிருக்கின்றன வங்காளம், உத்திரப்பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள். அவர்களின் மாநில உரிமைக்குரலுக்கு முன் மாதிரியாக விளங்குவது தமிழகம்.

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்த அப்போதைய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி முழக்கம்தான் இன்றைக்கு மாநில உரிமைகளைப் பற்றி பேசத்துவங்கியிருக்கின்ற மாநிலங்களுக்கான வழிகாட்டி.

மாநில சுயாட்சியின் வழிகாட்டியாகத் தமிழகம் விளங்கினாலும் சிறுகச்சிறுக நமது உரிமைகள் ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டுவிட்டன.

காட்டாக, மாநிலங்களிடமிருந்துப் பிடுங்கி பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கல்வியுரிமை.

இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் 33 மாவட்டங்களுக்கு 29 அரசு மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால் நீட் என்ற அநீதியைத் திணித்து தமிழகத்துக்குச் சொந்தமான இடங்களை வேற்று மாநிலத்தவர்க்குப் பிடுங்கி அளிக்கிறது ஒன்றிய அரசு.

காட்டாக இது ஒன்றுதான், இன்னும் எண்ணற்ற துறைகளில் நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளச் சுரண்டல், ஆற்றுநீர் பங்கீட்டில் இழைக்கப்படும் அநீதி அதனால் ஏற்படும் உழவுத்துறை பாதிப்புகள், ஒன்றிய அரசு அலுவலகங்களில் வெளி மாநிலத்தவர்க்கு அதிக இடங்கள் என இன்னும் ஏராளமான உரிமைகளை ஒன்றிய அரசின் ஆதிக்கத்தால் இழந்து வருகிறோம்.

இந்த இடர்கள் இங்குமட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்றன.

அண்மையில் பதவியேற்ற மத்தியபிரதேச முதல்வர் கமல் நாத் அம்மாநில மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். காரணம், பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் மத்தியபிரதேசத்தில் இருக்கும் வேலைகளை எடுத்துக்கொள்வதால்.

எனவே, ஒவ்வொரு இந்திய மாநிலங்களிலும் தன்னாட்சியின் குரல் ஒலிக்கவேண்டும். பாதுகாப்பு, பணவியல், வெளியுறவு மற்றும் மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து போன்ற துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் மாநில அரசுகளிடம் இருக்கவேண்டும்.

காட்டாக, இந்திய இரயில்வே மாநிலங்களுக்கிடையே இயங்கட்டும், தமிழக இரயில்வே, ஆந்திர இரயில்வே, பஞ்சாப் இரயில்வே என அந்தந்த மாநிலத்துக்குள்ளான இரயில் போக்குவரத்தை மாநிலங்கள் பார்க்கட்டும்.

போர் மூண்டால் இந்திய இராணுவம் வரட்டும், சட்ட மற்றும் ஒழுங்கு சார் இடர்களை மாநில காவல்துறை பார்க்கட்டும்.

கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடும் ஆஸ்திரேலியாவும் மோதட்டும். இது தனிநாடு கோரிக்கையல்ல, தன்னுரிமை கோரிக்கை, தன்னாட்சி கோரிக்கை. ஐக்கிய இராச்சியம் (UK) என்பது ஒரே நாடுதான். ஆனால் அதனுள் இங்கிலாந்து, இசுகாட்லாந்து என்ற இரு நாடுகளுடனும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சர்வதேச போட்டிகளில் விளையாடுகின்றதே! அவ்வாறு.

தன்னாட்சி அதிகாரங்களால் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி அதிகரிக்குமேயன்றி குறையாது.

இங்கே பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற தகவல்கள் மிகமிகக் குறைவே, எண்ணிலடங்கா தரவுகளோடு எண்ணற்ற ஆளுமைகள் கலந்துகொள்ளும் தன்னாட்சி மாநாடு வருகின்ற பிப்ரவரி 3 அன்று நடைபெறவிருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, வெளிமாநிலங்களில் உரிமைக்குரல் எழுப்பிவரும் ஆளுமைகளும் பங்கேற்கின்றனர், வெளிநாடுகளில் பணிபுரியும் ஆய்வறிஞர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்வில் மொழிப்போராட்டத்திலும் எல்லைப் போராட்டத்திலும் பங்கேற்ற ஈகியருக்கு மரியாதை செய்யப்படவிருக்கிறது.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் “கூட்டணியாட்சி” என்று இருக்கின்ற இன்றைய நிலை மாறி, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்கிற நிலையை நோக்கி நகர்வோம், வாருங்கள்.

– அகிலன் கார்த்திகேயன்

Leave a Response