ஆளுநர் அவர்களே, 28 ஆண்டுகள் போதாதா?
ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்க எனும் ஒற்றை முழக்கத்தை மையமாக வைத்து அற்புதம்மாள் பங்கேற்கும் கருத்தரங்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் 26.01.2019 அன்று மாலை மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( பியூசிஎல் ) சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
30 ( 2 ) காவல் தடைச் சட்டம் அமுலில் உள்ளது என்பதாலும்,
கருத்தரங்கம் நடத்தும் நாளானது இந்தியாவின் குடியரசு தினமாக உள்ளதாலும், சர்ச்சைக்குரிய கருத்தரங்கம் என்பதாலும்,
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிய வருவதாலும்,
பொதுமக்களின் நலன் கருதியும், பொது ஜன அமைதியை மனதில் கொண்டும்
கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு முந்திய இரவு அனுமதி மறுக்கப்பட்டது.
30 (2) காவல் தடைச் சட்டம், சாலையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம். அதற்கும் அரங்கக் கூட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்றே சட்டம் குறிப்பிடுகிறது.
“ஏழு தமிழரை விடுதலை செய்க!” என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றியதை அனைவரும் அறிவர். இந்தக் கோரிக்கையை முன்னெடுப்பதை எப்படி ” சர்ச்சைக்குரிய கருத்தரங்கு” எனக் கருத முடியும்?
தனி மண்டபத்தில் நடப்பது, எவ்வாறு பொது நலனுக்கோ, பொது அமைதிக்கோ ஊறு விளைவிக்க முடியும்?
இப்படி எண்ணற்ற ஐயங்கள் எழுகின்றன.
இருப்பினும், அற்புதம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க, கருத்தரங்கு, வேறோர் இடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பாக மாற்றப்பட்டது.
அப்பொழுது வந்திருந்த எண்ணற்ற தோழர்களின் பரிந்துரைக்கு ஏற்ப, கருத்தரங்கிற்கு மாற்றாகப் பின்னொரு நாளில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் பிரமாண்டமான பொதுக் கூட்டமாக நடத்துவது என முடிவு செய்யப் பட்டது.
– கண.குறிஞ்சி