சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் இல்லத்தைச் சேர்ந்த லோகேஷ் – ஜெயஸ்ரீ திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்நிகழ்வில் முக ஸ்டாலின் பேசியதாவது….
கொடநாடு விவகாரத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சயன், மனோஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் பேட்டி கொடுத்தனர். அதில் எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் நாங்கள் செயல்பட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தி வந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும். நான் குற்றமற்றவன், அப்பழுக்கற்றவன். என் மீது புகார் தெரிவிக்க யாருக்கும் தகுதி இல்லை என்று கூறி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூவை பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அதைச் செய்யாமல் ஜாமீனில் வெளியே வந்திருந்த சயன், மனோஜ் ஆகியோரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஆனால் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவர்களை சிறையில் அடைக்காமல் ஜாமீனில் அனுப்பிவிட்டது.
கொடநாடு விவகாரத்தில் நியாயமாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு தன்னை ஆட்படுத்தி இருந்தால் அவரைப் பாராட்டி இருக்கலாம். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது நான் குற்றம் சொல்வதால் என் மீது அவர் வழக்கு போடத் தயாரா?
இப்போது இன்னொரு செய்தி வருகிறது. அது தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது அறையில் நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தி இருக்கிறார் என்பதுதான்.
எதற்கு இந்த யாகம்? ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதுபோல் கொடநாடு வழக்கு முடியும்போது எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் சென்றுவிடுவார். முதலமைச்சர் பதவி காலியாக போகிறது என்பதால் அதைக் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாகச் சொல்கிறார்கள்.
முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா? அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினார்களா? என்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் சொல்லியே தீர வேண்டும். வருகிற பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் நள்ளிரவில் யாகம் நடத்தியதை மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகப் பேசியிருப்பதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.