கோலியும் தோனியும் அதிரடி – இந்திய அணி வெற்றி

இந்தியா – ஆஸ்திரேலியா மட்டைப்பந்தாட்ட அணிகள் இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடந்தது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, பின்ச் 6 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் வெளியேறினார்.

பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் 29 அவுட்டானார். ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளித்தார். மேக்ஸ்வெல் 48 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

ஷிகர் தவான் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் 54 ரன்கள் சேர்த்த நிலையில், 43 ரன்னில் ரோகித் வெளியேறினார்.

அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு 24 ரன்னில் அவுட்டானார். அப்போது, இந்தியா 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய எம்.எஸ்.டோனி கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். அணித்தலைவர் விராட் கோலி பொறுப்புடன் ஆடி ஒருநாள் போட்டிகளில் 39 ஆவது சதமடித்தார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் டோனியும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டோனி அரை சதமடித்து அசத்தினார்.

இறுதியில்,நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 – 1 என்கிற சமநிலையில் உள்ளது.

Leave a Response