திருக்குறளைத் திருவள்ளுவர்தான் எழுதினார் என்று சொன்னதற்காக மாணவிக்குத் தண்டனை!

திருக்குறளைத் திருவள்ளுவர்தான் இயற்றினார் என்று கூறிய கல்லூரி மாணவியை கல்லூரியிலிருந்து நீக்கிய கொடுமை தமிழகத்தில் நடந்துள்ளது, இதற்குக் கண்டனம் தெரிவித்து
தமிழ்நாடு-புதுச்சேரி தமிழமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்விவரம்,

தமிழ்நாடு- புதுச்சேரி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் கூட்டம் புதுச்சேரி ஆனந்த இன் உணவகத்தில் 19-05-2015 இரவு 7.00 மணிக்கு நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு தமிழமைப்புகளின் கூட்டமைப்பு சேர்ந்த இலக்குவனார் திருவள்ளுவன், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன், கண்ணதாசன் இலக்கிய கழகத்தின் தலைவர் இரா.தேவதாசு, தனித்தமிழ் இயக்கத்தின் தலைவர் க. தமிழ மல்லன், புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலர் புதுவைத் தமிழ் நெஞ்சன், மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் கு.அ தமிழ்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை தியாகராச நகரில் சங்கர்லால் சுந்தர்பாய் சாசன் செயின் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் மாணவி ஒருவர் திருக்குறளை, திருவள்ளுவர் தானே எழுதவில்லை என்றும், சமண நூல் ஒன்றிலிருந்து மொழி பெயர்த்துள்ளார் என்று பேசியுள்ளார். அதற்கு அங்கு பயிலும் காட்சி தொடர்பியலில் (Visual communication) மாணவி பிரிதிவிகுமார் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாணவி பிரிதிவிக்குமார் நான்காம் அகவையிலேயே 1330 திருக்குறளையும், அதற்கு கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய மொழிபெயர்ப்பையும் ஒப்புவித்து பாராட்டுதல் பெற்றவராவார். அதன் பின்னர் பல்வேறு திருக்குறள் நிகழ்வுகளிலும் பொது அறிவு நிகழ்வுகளிலும் பங்கேற்று பல பரிசுகளையும் பெற்றவர்.

மாணவி நீக்கம்: திருக்குறள் குறித்த தவறான கருத்துக்கு பாராட்டு தெரிவித்த கல்லூரி நிருவாகம் திருவள்ளுவர் தான் திருக்குறள் இயற்றினார் என்று கூறிய மாணவி பிரிதிவிக்குமாரை கல்லூரியை விட்டு நீக்கியதையும், பல்கலைக் கழகத் தேர்வும் எழுத முடியாமல் தடுத்ததையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கல்லூரி நிருவாகம் உடனடியாக மாணவியை கல்லூரியில் சேர்த்து தேர்வு எழுத ஆவண செய்ய வேண்டும்.
இம்மாணவிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் தனித்தேர்வினை நடத்த ஆவண செய்ய வேண்டும்.
கல்லூரி திருக்குறள் குறித்த தவறான கருத்துக்கு ஆதரவளித்தமைக்கு மன்னிப்பு கோரவேண்டும்.
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து மாணவியை கல்லூரியில் சேர்க்கவும் தனித்தேர்வு எழுதவும் ஆவண செய்வதோடு தவறான செய்தி பரப்பும் இக்கல்லூரி மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவு கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கூறியவற்றை நிறைவேற்ற மறுத்தால் அனைத்து தமிழ் அமைப்புகளையும் சேர்த்து கல்லூரியின் முன் போராட்டம் நட்ததுவது எனவும் முடிவு செய்துள்ளோம்.

Leave a Response