இவ்வளவு பேசிட்டேன் இதைப் பேச மாட்டேனா? – கலகல மு.க.ஸ்டாலின்

கரூர் திருமாநிலையூரில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் டிசம்பர் 27 மாலை நடைபெற்றது.

விழா மேடை அண்ணா அறிவாலயம் போல் அமைக்கப்பட்டு இருந்தது.

கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

அண்மையில் தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

செந்தில்பாலாஜிக்கு தி.மு.க. ஒன்றும் புதிய இயக்கம் அல்ல. ஏற்கனவே இருந்த தாய்க் கழகம் தான். தாய், தந்தையை விட்டுப் பிள்ளைகள் பிரிந்து சென்றாலும், தங்களது பிள்ளைகள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர்கள் காத்திருப்பார்கள்.

அந்த நம்பிக்கையில் தான் நல்ல பிள்ளைகளாக மீண்டும் வந்து சேர்ந்திருப்பவர்களை வரவேற்கிறேன். சரியான நேரத்தில் தான் செந்தில்பாலாஜியும், அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு ஏற்ற பயனை உரிய நேரத்தில் பெறுவார்கள் என்று உறுதி அளிக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்பட நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தோற்கப் போகிறார் என்ற ஒரு அடையாளத்தைத் தந்திருக்கிறது.

பாரதீய ஜனதாவின் கோட்டை என்ற பெயருக்குரிய மாநிலங்களில் அக்கட்சி தோல்வியைத் தழுவியிருக்கிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் மாற்றம் வரலாம்.

மத்தியில் பிரதமராக இருக்கிற மோடியும், தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமியும் ஆள்வதற்குத் தகுதியில்லாத நிலையில் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு செய்யாதுரை, சேகர்ரெட்டி போன்றவர்களைத் திருப்திபடுத்தினால் போதும்.

மோடிக்குப் பல நாடுகளைச் சுற்றினால் போதும். எனவே இவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

பா.ஜ.க.வின் கோட்டையான மாநிலங்களில் ஓட்டை விழுந்திருக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்துவிட்டது. எனவே மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்பட இருக்கிறது.

அதனால் தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியைப் பார்த்து மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை ‘கிரிமினல் கேபினட்’ என பெரம்பலூர் கூட்டத்தில் நான் ஏற்கனவே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினேன். இதுவரை என் மீது அவர்கள் ஒரு வழக்கு கூட போடவில்லை. ஸ்டாலின் உண்மையைத் தான் பேசியிருக்கிறார் என நினைத்து விட்டார்கள் போலும்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலில் சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருக்கிறது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி பதறியடித்து டெல்லிக்குப் போய் தடை உத்தரவு பெற்றார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன.

இவ்வளவையும் பேசிவிட்டு இங்குள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பற்றி பேசாமல் செல்வேனா? போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்குவதற்கு ரூ.300 கோடி டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டது. டெண்டர் விதிகள் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கர் என இன்னொரு அமைச்சர் இருக்கிறார். அவர் மீது குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆக்கப்பூர்வமான சிந்தனையோ, செயல்பாடோ கிடையாது. இதற்கு உதாரணமாக ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையைக் கூறலாம். ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்களில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் மக்கள் கொந்தளிப்பை அடக்குவதற்காக ஆலையை மூடுவதாக நாடகமாடினார்கள்.

நான் அப்போதே சொன்னேன். ஆலையை மூடுவதற்கு அரசாணை பிறப்பித்தால் மட்டும் போதாது. அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து, சட்டமன்றத்தில் அதனைத் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றேன்.

நான் மட்டுமல்ல, பல தலைவர்களும் இதனை வலியுறுத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு அதனைச் செய்யவில்லை.

இப்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து, கொள்கை அளவில் முடிவெடுத்திருந்தால் தான் நிரந்தரமாக மூட முடியும் என தீர்ப்பு அளித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் கையாலாகாத தனத்தையே இது காட்டுகிறது. ஆலையைச் செயல்பட வைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. அதற்கு பல பேரங்கள் ஆலை முதலாளியுடன் நடந்து உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திலே 10 தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு அனுமதி அளிப்பதாகவும், இதன் மூலம் 34 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்கள். கேட்பதற்கு மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.

இந்த ஆட்சியில் இதுவரை எத்தனை பேருக்கு வேலை தந்து இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பார்களா? இந்த அரசு கூறுவது எல்லாமே வெறும் வெற்று அறிவிப்புகள் தான்.

நாட்டுக்காகச் சிறைக்கு சென்றதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். எந்த நாட்டுக்காக என தெரியவில்லை. செந்தில்பாலாஜி கூறியது போல் ஆட்சி மாற்றம் வந்த மறுவினாடியே எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர்களும் சிறைக்குச் செல்வது உறுதி.

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்றத் தேர்தலிலும், 20 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். அதற்கான ஜனநாயகப் போருக்கு நாம் தயாராகிக் கொண்டு இருக்கிறோம். அதில் கைகோர்ப்பதற்காகக் கழகத்தில் இணைந்துள்ளவர்களை வரவேற்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப நாடும் நமதே, நாற்பதும் நமதே என்பது நமது முழக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Response