தமிழகத்துக்கு வெளிமாநிலத்தவர் வருகையைத் தடுப்போம் – பெ.மணியரசன் அதிரடி அறிவிப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் மூன்றாவது கூட்டம், 02.12.2018 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை தஞ்சையில் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டத்திற்கு பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை வரவேற்றார். பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், பழ. இராசேந்திரன், இரெ. இராசு, ம. இலட்சுமி, க. அருணபாரதி ஆகியோரும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1 :

மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க அந்த இடத்தில் கொரில்லா அறப்போர் நடத்துவோம்!

இந்திய அரசின் நீர் வள ஆணையம் “திட்ட அறிக்கை அனுமதி” என்ற பெயரில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டுவில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கியுள்ள சட்டவிரோதச் செயல். தமிழர் நெஞ்சாங்குலையில் ஈட்டி பாய்ச்சியது போல் உள்ளது.

இந்த “அனுமதி“, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு (05.02.2007) மற்றும் உச்ச நீதிமன்ற அமர்வு 16.02.2018 அன்று வழங்கிய காவிரித் தீர்ப்பு ஆகியவற்றிற்கு எதிரான செயலாகும். இந்திய ஆட்சியில் காங்கிரசுக் கட்சி இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு எதிரான இனப்பாகுபாட்டு அணுகுமுறையைத்தான் காவிரிச் சிக்கலில் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன.

கர்நாடக அரசு தனது திட்டப்படி மேக்கேத்தாட்டுவில் 67 ஆ.மி.க. (TMC) கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தை 5,912 கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்தால், அதன்பிறகு ஒரு சொட்டு மிச்ச நீர் கூட மேட்டூர் அணைக்கு வராது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பாசனம் பெறும் 25 இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும். இருபது மாவட்டங்களில் இப்போது கிடைத்துவரும் காவிரிக் குடிநீர் முற்றிலும் நின்று போகும். மக்களின் உயிர்வாழ்வும் கேள்விக் குறியாகிவிடும்.

மேக்கேத்தாட்டு அணை கட்டத் திட்டமிட்டுள்ள இடத்திற்கே சென்று போராட்டம் நடத்துவதற்காகக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் ஐயாயிரம் உழவர்களும் உணர்வாளர்களும் 07.03.2015 அன்று தமிழ்நாட்டு எல்லையான தேன்கனிக்கோட்டையிலிருந்து புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு அனைவரையும் தடுத்துத் தளைப்படுத்தி மூன்று இடங்களில் அடைத்தது.

அதன்பிறகும், கர்நாடக அரசு தனது மேக்கேத்தாட்டுத் திட்டத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து அணை கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அத்திட்டத்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் உழவர் அமைப்புகளும் அடுத்தடுத்த தொடர் போராட்டங்கள் நடத்தியும் இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்தும் போராடி இருக்க வேண்டும். அவ்வாறான பொறுப்புணர்ச்சியும் அக்கறையும் தமிழ்நாட்டு அரசியலில் இல்லை.

எனவே கா்நாடகம் தனது சட்டவிரோத அணைக்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு நரேந்திர மோடி அரசிடம் அனுமதி வாங்கியுள்ளது.

இப்பொழுதாவது, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் உழவர் அமைப்புகளும் பிற இயக்கங்களும் ஓருங்கிணைந்து மேக்கேத்தாட்டுவில் சட்ட விரோத அணைகட்ட அனுமதித்த இந்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.

மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்திற்கு அளித்த அனுமதியை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடியைத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவின் மூன்றாவது பேரவை வலியுறுத்துகிறது.

இந்திய அரசு மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கவில்லை எனில், தமிழர்கள் அடுக்கடுக்காக மேக்கேத்தாட்டுப் பகுதிக்கு சென்று அணி அணியாக அறப்போர் கொரில்லாக்களாக மறியல் செய்து அணைகட்டும் பணியைத் தடுக்க வேண்டும் என்று அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. உயிரைப் பணயம் வைத்து இந்த கொரில்லா அறப்போராட்டத்தில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இப்போராட்டத்தில் கலந்து கொள்வோர் பட்டியலைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் எடுக்கும் போது தமிழர்கள் தாங்களே முன்வந்து பெயர் கொடுக்க வேண்டும் என்ற உறவுடனும் உரிமையுடனும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 :

தமிழ்நாட்டில் அதிகமாகி வரும் வெளிமாநிலத்தவர் வெள்ளத்தைத் தடுக்க

சென்னை சென்ட்ரலில் மனிதச் சுவர் போராட்டம்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் அலை அலையாகக் வந்திறங்குகின்றனர். தமிழ்நாட்டின் இந்திய அரசுப் பணிகளிலும், அரசுத்துறை நிறுவன வேலை வாய்ப்பிலும், உடல் உழைப்புப் பணிகளிலும் இவர்கள் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்து விடுகின்றனர். தமிழ்நாட்டு இளையோரின் வேலை வாய்ப்பு பறிபோகின்றது.

தொழில் – வணிகம் ஆகியவற்றிலும் வெளி மாநிலத்தவரே ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான நிலை நெருங்கி வருகிறது. இப்போக்கு, தமிழர்களின் வேலை, தொழில், வணிகம், பண்பாடு உள்ளிட்ட வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மொழியினத் தாயகமாக “தமிழ்நாடு” உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சீர்குலைக்கிறது! தமிழ்நாட்டை கலப்பின மண்டலமாக மாற்றுகிறது!

எனவே, தமிழ்நாட்டில் தொகை தொகையாகக் குவிந்து கொண்டிருக்கும் வெளி மாநிலத்தவர் வெள்ளத்தைத் தடுக்கும் வகையில், சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் (சென்ட்ரல்) தமிழ் மக்களைத் திரட்டி மனிதச் சுவர் எழுப்பி, அவர்களை தமிழ்நாட்டில் நுழைய வேண்டாம் எனத் தடுக்கும் அறப்போராட்டத்தை நடத்துவது என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தீர்மானிக்கிறது!

தீர்மானம் – 3 :

கசா புயலில் பயிர்கள், வீடு உள்ளிட்டவற்றை இழந்து வாடும் மக்களுக்கு முழு இழப்பீடு வழங்குக!

தமிழ்நாட்டைத் தாக்கிய கசா புயல், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பெரும் உயிர்ச்சேதத்தைக் குறைத்தது என்ற போதிலும், புயல் தாக்கிய உடனடி நாட்களில் தமிழ்நாடு அரசின் நிர்வாகம் செயலற்று இருந்தது.

வளர்த்த பயிர்கள், மரங்கள், வாழ்ந்த வீடுகள், கால்நடைகள், வாழ்வாதாரமான மீன் பிடி படகுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிலைகுலைந்து நின்ற மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும், மக்கள் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் உடனடியாக துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டது பாராட்டத்தக்கது. துயர் துடைப்புப் பணிகளில் தமிழ்த்தேசியப் பேரியக்கமும் தனது எளிய பங்களிப்பைச் செய்திருக்கிறது.

வாழிடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள துயர் துடைப்பு நிதி மிகமிகக் குறைவானது. காப்பீட்டு நிறுவனங்களைக் கைகாட்டிவிட்டு, தமிழ்நாடு அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடக் கூடாது.

“கசா” பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுக் கொள்ளும் வகையில் முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

வீழ்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடாக மரம் ஒன்றுக்கு 12,000 ரூபாய் வீதமும், நெற் பயிர்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், அதேபோல் வாழை, பலா, முந்திரி, சவுக்கு உள்ளிட்டவற்றுக்கு அவற்றின் வாழ்நாள் பயன் முழு மதிப்பில் 75 விழுக்காட்டுத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும்.

மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை இழக்கும் கடலோடி மக்களுக்கு இதேபோன்று 75 விழுக்காடு இழப்பீடு வழங்க வேண்டும்.

வீடிழந்தவர்களுக்கு முழுமையாக வீடு கட்டித் தருவதும், இனி வருங்காலங்களில் இயற்றைச் சீற்றங்களால் பாதிக்கப்படாத வண்ணம் உறுதியான வீடுகள் அமைத்துத் தர வேண்டும். ஓட்டு வீடுகளையும் முழுமையாக சீரமைத்துக் கொள்ளும் வகையில் பேரழிவு இழப்பீடு வழங்க வேண்டும்.

இறந்த கால்நடைகளுக்கு கண் துடைப்பு நிதி வழங்குவதற்கு மாறாக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொள்ளும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

புயல் சீற்றத்தால் கால்சியம் நிறைந்த கடல் மண் சேறாக ஆக்கிரமித்துள்ள உப்பளங்களை பழைய நிலைக்கு மீட்டுத் தரும் வகையில் கணக்கிட்டு, அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இம்மாவட்டங்களில் வரும் மூன்று மாதங்களுக்கு வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின் கட்டணம் விதி விலக்கு அளிக்க வேண்டும். இம்மாவட்ட மக்கள் வாங்கியிருக்கும் பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்திய அரசு, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை வலியுறுத்தி, உரிய நிதியைப் பெற்று தானும் நிதியை சேர்த்து தமிழ்நாடு அரசு விரைவாக இந்த இழப்பீட்டு்த் தொகையை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் செயல்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்புகளும், மீனவர் சங்கங்களும், பிற தொழிற்சங்கங்களும், வணிகர் அமைப்புகளும் ஒன்றிணைந்து உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response