போலந்து வார்சா பல்கலைக்கழகத்துக்கு தமிழ்ப்பேராசிரியரை அனுப்ப மறந்த மோடி அரசு.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
வார்சா பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைப் பேராசிரியர் பதவிக்கு இந்தக் கல்வியாண்டுக்கு (2014-2015) ஒருவரும் அனுப்பப்படவில்லை. அங்கு கல்வியாண்டு அக்டோபரில் தொடங்கி ஜூலையில் முடியும். எட்டு மாதங்கள் முடிந்து விட்டன. இரண்டாவது பருவம் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை யாரையும் தேர்வு செய்யவில்லை. அனுப்பும் எண்ணத்தையே இந்த அரசு கைவிட்டுவிட்டதா? என்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.இராமசாமி.

இது குறித்து அவர் எழுதியிருக்கும் பதிவு…

போலந்து நாட்டிற்கும் தமிழ்மொழிக்குமான உறவை நேரடியான உறவு எனச் சொல்ல முடியாது. உலக நாடுகள் பற்றிய அறிவைத் தேடுவதில் ஐரோப்பியர்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் ஒரு பகுதியாகவே தமிழின் மீதான உறவைப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் முக்கியமான பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் துறைகள் இருக்கின்றன. அத்துறைகளில் இந்தியத் தத்துவம், இந்தியவரலாறு, இந்தியப் பண்பாடு, இந்திய மொழிகள் பற்றிய கல்வியைக் கற்பிக்கிறார்கள். இந்திய மொழிக்குடும்பங்கள் பற்றிய கல்வி என்பதில் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழியையும் அறிந்தாக வேண்டும் என்ற உண்மையை இந்தியவியல் துறைகளைத் தொடங்கிய பேராசிரியர்கள் உணர்ந்ததின் விளைவே ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பற்றிய படிப்பாக விரிந்துள்ளது. இந்தியத் தொல்மனத்தை அறிய சமஸ்கிருதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழும் என நம்புகிறது ஐரோப்பிய அறிவுலகம். போலந்து அறிவுலகமும் அதிலிருந்து விலகவில்லை
போலந்து நாட்டு வார்சா பல்கலைக் கழகத்தில் 1932 இல் இந்தியவியல் துறை தொடங்கப் பட்டது. முதலில் கற்பிக்கப்பட்ட இந்திய மொழி சமஸ்கிருதம். பிறகு வங்காளமும், இந்தியும் தற்கால இந்திய மொழிகள் என்ற நிலையில் கற்பிக்கப் பட்டுள்ளன. அதற்குப் பிறகுதான் தமிழ் சேர்க்கப் பட்டுள்ளது. 1973 இல் தொடங்கப் பட்ட தமிழுக்குத் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் பண்பாட்டுப் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் ஒரு பேராசிரியரை அனுப்பி வைக்கிறது. அவருக்கு அங்கு பெயரே தமிழ் இருக்கை ( Tamil Chair Teacher) ஆசிரியர் தான். தமிழுக்கு அளிக்கப்பட்ட இருக்கை நிலையை இந்திக்கு 1983 இல் தான் இந்திய அரசு வழங்கி இருக்கிறது.

Leave a Response