இணையதள கட்டுரையாளர்கள் அடுத்தடுத்து கொலை- இது வங்காளதேச பயங்கரம்.

வங்காளதேசம், மதச்சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக கருதப்படுகிறது. ஆனாலும் அந்த நாட்டின் 16 கோடி மக்களில் 90 சதவீதத்தினர் குறிப்பிட்ட ஒரு மதத்தவர் ஆவார்கள்.

அங்கு அண்மைக்காலமாக மதச்சார்பற்ற கருத்துகளை இணையதளங்களில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டு வருகிறவர்கள், மதவாத தீவிரவாதிகளால் குறிவைத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அங்கு ‘முக்தோ மோனா’ என்ற இணையதளத்தை நடத்தி, அதில் மதச்சார்பற்ற கருத்துக்களை வெளியிட்டு வந்தவர், அவிஜித் ராய். இவர் டாக்காவில் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இவரது படுகொலைக்கு, சமீபத்தில்தான் அல்கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இந்த படுகொலையில் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிஜித் ராய் படுகொலையை தொடர்ந்து மார்ச் மாதம், டாக்காவில் வாசிகுர் ரகுமான் என்ற இணைய தள கட்டுரையாளர் படுகொலை செய்யப்பட்டார். இவரும் மதச்சார்பற்ற கட்டுரைகளை எழுதி வந்தவர் ஆவார்.

இவரது படுகொலையில், மதக்கல்வி பயின்றுவந்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சில்லட் நகரத்தில் சுபித் பஜார் பகுதியில் வசித்து வந்த ஆனந்த பிஜாய் தாஸ் (வயது 33) என்ற இணைய தள கட்டுரையாளர், நேற்று காலை 8.30 மணிக்கு வீட்டில் இருந்து தனது அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றபோது. முகமூடி அணிந்து வந்த ஆசாமிகள், அவரை வழிமறித்து தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மதச்சார்பற்ற நிலையில் இருந்து கொண்டு, அத்தகைய கருத்துகளை இணையதளத்தில் எழுதி கொலை செய்யப்பட்ட 3–வது நபர் என்ற பெயரை இவர் பெறுகிறார்.

வங்காளதேச இணையதள கட்டுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் இம்ரான் சர்க்கார் இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘படுகொலை செய்யப்பட்ட ஆனந்த பிஜாய் தாஸ், கடவுள் நம்பிக்கை இல்லாதவர். முக்தோ மோனா என்ற இணையதளத்தில் அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்’’ என கூறினார்.

சமீப காலமாக ஆனந்த பிஜாய் தாஸ்க்கு அவரது கட்டுரைகளுக்காக மதவாத தீவிரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், அவர்களது கொலைப்பட்டியலில் ஆனந்த பிஜாய் தாஸ் இடம் பெற்றிருந்ததாகவும் அவரது நண்பரான தேபசிஷ் தேபு கூறினார்.

வங்காளதேசத்தில் மதச்சார்பற்ற கருத்துகளை இணையதளங்களில் கட்டுரையாக எழுதுகிறவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response