ஈரோட்டில் கனமழை, மக்கள் மகிழ்ச்சி.

ஈரோடு மாவட்டத்தில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. அவ்வப்போது கோடை மழை பெய்து வந்தாலும் வெயிலின் தாக்கம் மட்டும் குறையாமல் இருந்து வந்தது. இதன்காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசியது. வாகனங்களில் சென்ற பெண்கள் தங்கள் கைகளுக்கு உறை அணிந்தபடியும், முகத்தை துணியால் மூடியபடியும் சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. பகலில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தினாலும், மாலையில் குளிர்ந்த காற்று வீசி வந்தது. கோடை வெயிலை தணிக்கும் விதமாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு பலத்த சூறாவளிக்காற்றுடன் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து 2–வது நாளாக நேற்று மாலை 4 மணியில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மழைத்தூற தொடங்கியது. 5.30 மணிக்கு இது பலத்த மழையாக மாறி 6.15 மணி வரை சுமார் ¾ மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்க்குள் அடைப்புகள் இருந்ததால் அதன் கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. இதன்காரணமாக வாகனம் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். இந்த மழையால் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் ஈரோட்டில் குளிர்ச்சியான நிலை உருவானது.

இதேபோல் அரச்சலூர், தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கன மழை நீடித்தது.

Leave a Response