ஜெ வழக்கு , தீர்ப்பின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வரை ஓயமாட்டேன்–பி.வி.ஆச்சார்யா

சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் சொத்து கணக்குகள் தவறாக, கூடுதலாக காட்டப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 76 சதவீதமாக உள்ளது என்று அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு சொல்லி கொள்ள முடியாத வகையில், தவறுகளின் கூடாரமாக உள்ளது. சுமார் 919 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் 800 பக்கங்கள் வரை இந்த வழக்கின் பின்னணி, அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு சாட்சிகள் உள்பட பல விவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளிகள் மீது என்னென்ன குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது என்பதை தீர்ப்பில் குறிப்பிடவில்லை. குறிப்பாக 2 விஷயங்கள் மட்டுமே தீர்ப்பில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

அதில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு மற்றும் ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் உள்ள வீடுகள் ரூ.13 கோடியில் புனரமைப்பு செய்யப்பட்டதாக டிவிஏசி உறுதிபடுத்தியது. அதேபோல் கொடநாடு தேயிலை தோட்டம் ரூ.7 கோடியில் வாங்கியது உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களின் மதிப்பு ரூ.27 கோடியாக காட்டியுள்ளதை, தீர்ப்பில் ரூ.5 கோடி என்றும், வி.என்.சுதாகரனுக்கு ரூ.6 கோடி செலவு செய்து திருமணம் செய்துள்ளதை டிவிஏசி நிரூபித்தும், தீர்ப்பில் ரூ.26 லட்சம் செலவு செய்தாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களை தவிர, தீர்ப்பில் வேறு எதையும் குறிப்பிடவில்லை.

மேலும் தீர்ப்பில் ஜெயலலிதாவின் மொத்த வருமானம் ரூ.37,59,02,466 என்றும் செலவு ரூ.34,76,65,654 கழித்தால் ரூ.2,82,36,812 மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 10 சதவீதம் சொத்து சேர்த்திருந்தால், அதை கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது. அதனடிப்படையில் பார்க்கும்போது ஜெயலலிதா 8.12 சதவீதம் மட்டுமே கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதால் விடுதலை செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் தீர்ப்பின் 852வது பக்கத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், இந்தியன் வங்கியில் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் பெயரில், ரூ.10,67,36,274 கடன் வாங்கியதாக டிவிஏசி கூறியுள்ளது.

ஆனால் ரூ.24,17,31,274 கடன் வாங்கியதாக கூறியுள்ளார். அப்படியானால் டிவிஏசி சொல்வதை காட்டிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ரூ.13,49.95,000 கூடுதலாக பெற்றுள்ளார்கள் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் ஒப்புக் கொள்கிறார். இதனடிப்படையில் பார்க்கும்போது தீர்ப்பில் ஜெயலலிதாவின் வருமானம் ரூ.34,76,65,654 என்று கூறப்பட்டுள்ளது. அதில் வங்கி கடனாக கூடுதலாக காட்டியுள்ள ரூ.13,49,95,000 கழித்தால் ரூ.21,26,65,654 வருகிறது. இந்த தீர்ப்பில் மேலே குறிப்பிட்டுள்ள ெஜயலலிதாவின் சொத்து மதிப்பான ரூ.37,59,02,466ல் ரூ.21,26,65,654 கழித்தால் வருமானத்திற்கும் அதிகம் சேர்த்த சொத்தின் மதிப்பு ரூ.16,32,36,812 வருகிறது.

அதை பார்க்கும் போது சதவீதம் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகம் சேர்த்தது 76.07 சதவீதமாகும். இவ்வளவு சொத்து சேர்த்தவரை எப்படி நீதிபதி குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்துள்ளார் என்பது புரியாத புதிராகவுள்ளது. இது தவிர தீர்ப்பில் பல இடங்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 801 பக்கம் தொடங்கி தீர்ப்பின் கடைசி பக்கம் வரை ஒவ்வொரு பக்கத்திலும் குளறுபடியான அம்சங்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நான் கேள்வி கேட்பேன். இதற்காக யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. தீர்ப்பில் என்னென்ன குழப்பங்கள் உள்ளது என்பதை அரசிடம் தெரிவித்துள்ளேன். மேலும் இது தொடர்பாக தீர்ப்பு அம்சங்களை படித்து குறிப்பெடுத்து வருகிறேன். குளறுபடியான தீர்ப்பின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வரை ஓயமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response