கன்னட ராஜ்யோற்சவா களைகட்டுகிறது தமிழகம் தூங்குவது ஏன்?

நவம்பர் 1 ஆம் நாள் (1956) மொழிவழித் தமிழர் தாயகம் அமைந்த நாளை அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழக அரசு மட்டும் கொண்டாட மறுத்து வருகிறது. தமிழக காங்கிரசும் சரி, திராவிட இயக்கங்களும் சரி இந்த 62 ஆண்டுகால வரலாற்றில் ஒருபோதும் கொண்டாடியதாக எந்தப் பதிவும் இல்லை.

தி.மு.க. 1967 இல் ஆட்சிக்கு வந்தது முதல்
மொழிவழித் தமிழர் தாயக நாள் கொண்டாட வில்லை. இது குறித்து தமது ஆதங்கத்தை தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் அவர்கள் அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி, தமிழ்மொழி நிர்வாக மொழியாக, கல்லூரி மொழியாக மாறுவதற்கும், மாநில சுயாட்சி கொள்கையை ஏற்றுப் போராடுவதற்கும் அண்ணாவின் அரசு தன்முனைப்பாக செயல்பட வில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

திராவிடக் கட்சிகள் 62 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும் ம.பொ.சி. முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அது அப்படியே இன்றும் நீடிப்பது பேரவலமாகும்.

அவர் “தமிழரசு வாழ்க” எனும் தலைப்பில், செங்கோல் இதழில் 10.11.1968 இல் எழுதியது பின்வருமாறு:

இந்தியாவிலே ராஜ்யங்கள் மொழிவழி திருத்தி அமைக்கப்பட்டு, அக்டோபர் 31ஆம் தேதியோடு 12 ஆண்டுகள் முடிவு பெற்று விட்டன. நவம்பர் 1 ஆம் நாளன்று 13வது ஆண்டு பிறந்திருக்கிறது.

இந்த நன்னாளில் ஆந்திர, கன்னட மாநிலங்களிலே அந்தந்த மாநிலத்து மக்கள் விழா கொண்டாடியிருக்கின்றனர். தமிழகத்தின் தலைமையிடமான சென்னை நகரில் வாழும் ஆந்திரர்களும், கன்னடர்கள் கூட தத்தம் மொழிக்கென தனித் தனியே ராஜ்யம் அமைந்த நாளைக் கொண்டாடியிருக்கின்றனர். அமைச்சர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

எதனாலோ, தமிழகத்தில் மட்டும் – தமிழ் மொழிக்கென தனி ராஜ்யம் அமைந்த நவம்பர் 1 இல் யாரும் விழாக் கொண்டாடவில்லை. பிற மாநிலங்களின் தலை நகரங்களிலே வாழும் தமிழர்கள் கூட, – அவர்கள் நடத்தும் தமிழ்ச் சங்கங்கள் கூட – தமிழ் ராஜ்யம் அமைந்த நாளைக் கொண்டாடக் காணோம்.

தமிழரசுக் கழகமெனும் கொண்டாடியதா? என்று கேட்கலாம், தமிழினத்துக்கெனத் தனி மாநிலம் தேடப் பாடுபட்டவர்கள் – அதற்காக காங்கிரசிலிருந்தும் வெளியேறித் தியாகம் புரிந்தவர்கள் – தமிழரசுக் கழகத்தவர்களே! ஆனால், அவர்கள்தான் தனி ராஜ்யம் அமைந்த நாளைக்கூட கொண்டாட வேண்டுமென்றால், இது தமிழ்நாடு தானா?

தமிழரசுக் கழகத்தின் உழைப்பின் பலனை அனுபவிப்பதற்காகவேனும் மற்றவர்கள் கொண்டாடி யிருக்கலாமல்லவா?

இந்த விஷயத்தில் ஆளுங்கட்சிகூட அசட்டையாக இருந்ததனை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மறதி போலும்!

தமிழ் ராஜ்யம் அமைந்த பின், முதல் பத்தாண்டு காலம் வரை காங்கிரஸ் கட்சி ஆதிக்கமே தொடர்ந்தது. அந்தக் காலத்திலே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. நடத்த வேண்டுமென்ற நல்லெண்ணமும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கவில்லை.
ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற வேண்டுமென்று கோருவது “மொழிவெறி” என்று கூட காங்கிரஸ் வட்டாரம் கூறியது. கண்துடைப்புப் போல, இங்குமங்குமாக தமிழ் மொழியின் வனர்ச்சிக் கருதி, ஒன்றிரு காரியம் நடந்திருக்குமானால், அதுவும் தமிழரசுக் கழகம் நடத்திய கடுமையான போராட்டத்தின் விளைவுதான்.

இதற்குக் காரணம் என்ன?

தமிழ்நாடு காங்கிரஸ், மொழி வழியே தமிழ் ராஜ்யம் அமைவதனை விரும்பவில்லை. எதிர்க்கவும் செய்தது.
அதனால், தன் விருப்பத்துக்கு மாறாக தமிழ் ராஜ்யம் அமைந்த பின்னும் அதன் பலன்களை மக்களுக்கு அளிக்க மறுத்தது. தமிழர் வாழ்விலே , எங்கும் எதிலும் மணக்கும் படி செய்வதற்காகத் தான் தமிழ் வழங்கும் மாநிலத்தை தனி ராஜ்யமாக்கக் கோரினோம். ஆனால், தனி ராஜ்யம் அமைந்து பத்தாண்டு காலம் வரையும் தமிழ் மொழி புதுவாழ்வு பெறவில்லை. காங்கிரஸ் ஆட்சி நீடித்தால் அத்தைகய புதுவாழ்வு தமிழ்மொழிக்குக் கிடைக்காதென்பதும் தெளிவாகி விட்டது.

அதனால், தி.மு.க. ஆட்சி அமைவதனை வரவேற்றது தமிழரசுக் கழகம். அதற்காக எண்ணற்ற பழிச் சொற்களையும் ஏற்றது.

தி.மு.க. ஆட்சி அமைந்து இருபது மாதங்கள் ஆகின்றன. இந்த ஆட்சி தமிழர் வாழ்விலே, எங்கும் தமிழ்- என்பதனைத் தன் கொள்கையாக ஏற்றுக் கொண்டு விட்டது. அந்த நாளில் முன்னிருந்த காங்கிரஸ் ஆட்சியை விடவும் முற்போக்காக நடந்து கொண்டுள்ளது முன்னேற்றக் கழக ஆட்சி!

ஆனால், நடைமுறையில் வேகம் இல்லை. இதனை மிகுந்த வருத்தத்தோடு சொல்ல வேண்டி இருக்கின்றது.

தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலேயும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் ஆங்கிலயேர் – ஆங்கிலேர் காலத்தில்- அதன் பின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் – இருந்த நிலையிலேயே இன்னும் இருந்து வரக் காண்கின்றோம்.

அரசிதழ் (கெஜட்) தமிழில் வரக் காணோம். அரசாங்க அதிகாரிகளை மக்களோடு தொடர்புபடுத்தும் கடிதப் போக்குவரத்துகள் எல்லாம் இன்னமும் ஆங்கிலத்திலேதான்! தமிழ் வளர்ச்சித் துறையில்கூட இந்த ‘அசிங்கம்’ தொடர்கின்றது.

சட்டமன்றத்திலேயும் ஆங்கில ஆதிக்கம் அன்றுபோலத்தான். மன்றம் கூடுவது பற்றி அங்கத்தினர்களுக்கு அனுப்பப்படும் முன்னறிவிப்பும் , நிகழ்ச்சி நிரலும் தமிழிலும் அனுப்பப்படுகின்றன.
ஆம்; அவையும் தமிழில் மட்டுமே அனுப்பப்படும் நிலைமை இல்லை. அவையன்றி, மற்றவெல்லாம் ஆங்கிலத்தில்தான்! சட்டமன்றத்தின் முன் வைக்கப்படும் குறிப்புகள், மசோதாக்கள், தகவல்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்திலேதான்!

உறுப்பினர்கள் வேண்டுமென்றே ஆங்கிலத்தில் வினாக்கள் எழுப்பினால், அவற்றிற்கு ஆங்கிலத்திலே விடையளிக்கிறார் முதலமைச்சர். இது தேவையற்ற சம்பிரதாயம்.

தமிழ் விரோதிகள் ஆங்கிலத்தில் வினா எழுப்பினாலும் தமிழ்ப் பற்றுடைய முதல்வர் தமிழிலேயே விடையளிக்கலாம். மொத்தத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த நாளிலே நாம் எதிர்பார்த்த வேகம் இருக்க வில்லை. ஆளும்கட்சிக்கு தமிழ் மொழியிடத்துள்ள பற்றுதலை ஆட்சித் துறைக்கு வெளியேதான் அதிகமாக பார்க்க முடிகின்றது.

கல்லூரிப் பயிற்சி மொழிப் பிரச்சினையிலே கல்வி அமைச்சர் ஒரு தனிப் போக்கிலே அதாவது , தமது போக்கிலே செயல்பட்டு வருகிறார். இது திருத்தப்பட வேண்டும். தமிழ் மொழி ஒன்று மட்டுமே அனைத்துக் கல்லூரிகளிலும் பயிற்சி மொழியாக்கப் படுவதற்கு ஐந்தாண்டு காலவரம்பு நிர்ணயித்திருக்கிறது சட்டப்பேரவை. அந்தக் காலவரம்புக்குள் காரியம் நடைபெறுமா என்பது ஐயத்துக்குரியதாகவே இருந்து வருகின்றது.

நிர்வாக ரீதியில் தமிழ் ராஜ்யம் அமைந்ததென்றாலும் அது சுயாட்சியுடையதாக இல்லை. சுயாட்சி இல்லையேல் சுதந்திரம் இல்லை. தி.மு.கழகம், தான் பிறந்தநாள் தொட்டுக் கோரி வந்த திராவிட தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்ட போது, தமிழரசுக் கழகத்தின் கொள்கையான மாநில சுயாட்சியை மனமுவந்து ஏற்றது.

ஆனால், நாட்டுக்கு நன்மை பயக்காத திராவிட நாட்டுக் கோரிக்கையை வலியுறுத்துவதிலே காட்டிய வேகமும் விறுவிறுப்பும் மாநில சுயாட்சிக் கோரிக்கையை வற்புறுத்துவதிலே காட்ட வில்லை. இங்குமங்குமாக ஒன்றிரு சொற்பொழிவுகளிலே அதைப்பற்றி அடிக்கடி குறிப்பிடுவதைத் தவிர, நடைமுறையில் எதையும் செய்ய தி.மு.க.ஆட்சி இதுவரை முன்வரவில்லை.

ஆட்சிப்பீடத்தில் ஏறியபின், தி.மு.க.வைச் சூழ்ந்துள்ள புதிய சங்கடங்களை நாம் மறந்து விடவில்லை. ஆனால், அந்த சங்கடங்களுக்காக இதய கீதமாக உள்ள சுயாட்சிக் கோரிக்கையை ஊறுகாய் போட்டு விடுவதா? சுயாட்சி விஷயத்தில் தமிழக அரசு பொறுமை காட்டி வருவதை காங்கிரஸ் பெருந்தலைவர் திரு.அனுமந்தையா பாராட்டியிருக்கிறார்.

இந்தப் பாராட்டு பழிப்பதுபோலத்தான்!

எப்படியோ, தமிழ் ராஜ்யம் அமைந்த பின்னர் 12 ஆண்டுகள் பயனற்றுப் போய்விட்டன. தமிழ் ராஜ்யக் கோரிக்கையை எழுப்பி, அதில் வெற்றியுங் கண்ட தமிழரசுக் கழகமே ஆட்சிக்கு வந்திருக்குமானால், நிலைமை வேறுவிதமாக இருந்திருக்குமென்பதனை உறுதியாகச் சொல்ல நம்மால் முடியும்.

தி.மு.கழகம் ஆட்சியிலிருப்பதை, தான் இருப்பதுபோலத்தான் கருதுதின்றது தமிழரசுக் கழகம். ஆகவே, கடந்த 20 மாதங்களைப்போல் அல்லாமல், இன்றிலிருந்தேனும் புதிய தமிழகம் படைக்கும் புனிதப் பணியிலே இன்னும் அதிக அளவில் தீவிரம் காட்ட வேண்டுமென்று தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இன்றுள்ள தமிழ்ராஜ்யம் அமைவதற்கு தமிழரசுக் கழகத்தார் ஆற்றிய பணிகளையும் செய்துள்ள தியாகங்களையும் , அடைந்த இன்னல்களையும் தி.மு.க. தலைவர்கள் அறிவார்களாதலால் அவர்கள் நம்முடைய தாட்சண்யமற்ற விமர்சனத்திற்கு மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

வாழ்க தமிழரசு!

– ம.பொ.சிவஞானம்
10.11.1968

அவர் 1968 ஆம் ஆண்டு இப்படி எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அது பொருந்துகிறது.

இன்று
கர்நாடகா “இராஜயோற்சவா” களை கட்டத் தொடங்கி விட்டது. கர்நாடக அரசு விழா நடத்துகிறது.

தமிழக அரசு குறட்டை விட்டுத் தூங்குகிறது…

தமிழா! உன்நிலை அந்தோ பரிதாபம்!

– கதிர்நிலவன்

Leave a Response