கேரள காவல்துறை கிடுக்கிப்பிடி – அலறும் சங்பரிவார் கூட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தப் போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 210 பேருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டனர். 210 பேரின் புகைப்படங்களையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.அந்தப் படங்களை எல்லா மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.

அதன்படி, 210 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் 71 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 40 பேர், பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் தலா 30 பேர் ஆகியோர் அடங்குவர்.

இதுபோல், மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறந்து இருந்தபோது, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதன்மூலம், கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,407 ஆக உயர்ந்தது. எர்ணாகுளம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இத்தகவல்களை கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா தெரிவித்தார். வாகனங்களை சேதப்படுத்திய மேலும் 2 ஆயிரம் பேரையும் கைது செய்யத் திட்டமிட்டு உள்ளனர்.

காவல்துறையின் இந்தச் செயலுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:-

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் நடத்தப்படும் இந்த அரசு, அய்யப்பன் கோவிலின் புனிதத்தைக் கெடுக்கப் பார்க்கிறது. இவ்வளவு பேரை மொத்தமாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் 2-வது மிகப்பெரிய ஆன்மிகத் தலத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. கோவிலைக் காக்க மாபெரும் இயக்கத்தைத் தொடங்குவோம்.மாநிலம் முழுவதும் 26-ந் தேதி (இன்று) கண்டனப் பேரணி நடத்தப்படும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். கோர்ட்டையும் அணுகுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அய்யப்பன் கோயில் விவகாரத்தைப் பயன்படுத்தி கேரளாவில் பெரும் பதட்டத்தை உருவாக்க முயலும் சங்பரிவார்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை சரியானது என்கிற கருத்தும் நிலவுகிறது.

Leave a Response