விரதம் இருக்கிறேன் சபரிமலைக்குச் செல்வேன் – கேரளப் பெண் உறுதி

ஆண்– பெண் பாகுபாடின்றி வழிபாட்டில் பாலின சமத்துவத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டி, கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கு அய்யப்ப பக்தர்கள், பொதுமக்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் பெற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தீர்ப்பினை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்து அமைப்புகளின் முன்னெடுப்பில், தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டும், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றாலும், அதேமாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த்(32) என்பவர், சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில், நான் கடந்த 12 வருடமாக ஒவ்வொரு வருடமும் மண்டல காலத்தில் 41 நாட்கள் ஐயப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன். ஆனால் என் வயது பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்பதால், விரதம் மட்டும் இருப்பேன், மலைக்கு சென்றதில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையில், இந்த வருடம் வழக்கம்போல விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்ல இருக்கிறேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தாரும், உறவினர்களும் இருக்கிறார்கள்.

இன்று நான் தனியாக இருக்கலாம், ஆனால் வரும் காலங்களில் நிறைய பெண்கள் சபரிமலைக்கு செல்வார்கள் என நம்புகிறேன். கடவுளை தரிசிப்பதில் ஆண்-பெண் பாகுபாடுகள் இருக்ககூடாது.

தனது முடிவுக்கு அரசும், மக்களும் ஆதரவு அளிக்குமாறு கோரியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தீர்ப்பைப் பெண்களே எதிர்க்கிறார்கள் என்கிற சித்தரிப்பு நடக்கிற நேரத்தில் இப்பெண்ணின் செயல் அச்சித்தரிப்புகளை உடைத்துவிட்டது.

Leave a Response