தலைவர்கள் வருவார்கள் போவார்கள் தமிழ்நாடு அப்படி அல்ல – ஓங்கி உரைத்த ம.பொ.சி நினைவுநாள் இன்று

ம.பொ.சி. நினைவு நாள் 3.10.1995

இராசாசி ஆட்சியில் சிறைபட்ட ம.பொ.சி.

ஆந்திரர்கள் தமிழர்களின் தாயக நிலமான திருத்தணிகை, திருப்பதி உள்ளிட்ட ஆறு வட்டங்களை அபகரித்த போது வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தின் மையப் புயலாக திருத்தணிகை விளங்கியது.

1953 இல் சென்னையிலிருந்து மும்பைக்குச் சென்ற தொடர்வண்டியை ஆயிரக்கணக்கான திருத்தணிகை தமிழர்கள் மறித்து செல்ல விடாமல் தடுத்தனர்.

ஆங்காங்கே அங்குள்ள மக்கள் தன்னெழுச்சியாகப் புறப்பட்டு ஊர்வலமும் நடத்தினர். தெலுங்குப் பெயர்ப் பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

அப்போது இராசாசி அரசின் காவல் துறை கொடிய அடக்குமுறையை கட்டவிழ்த்தது.

காவல் துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். கலைய மறுத்தவர்கள் புளியம் விளாறால் அடித்துத் துவைக்கப்பட்டனர்.

திருத்தணிகை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு வந்த ம.பொ.சி. சத்தியாகிரக வழியில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

அப்போது முதல்வர் இராசாசி அவர்கள் ம.பொ.சி. நடத்தவிருக்கும் போராட்டத்தைக் கைவிடும் படி வேண்டுகோள் விடுத்தார். இதனை நிராகரித்து ம.பொ.சி. கடிதமொன்றை இராசாசிக்கு பின்வருமாறு எழுதினார்:

“இப்போது கூட சித்தூர் மாவட்டம் தகராறுக்குரிய பிரதேசம் என்பதனை ஒப்புக்கொண்டு அதற்காக எல்லைக் கமிஷன் அனுப்ப மத்திய அரசு உறுதி கூறுமானால் நான் போராட்டத்தை அடியோடு கைவிடுவேன். தாங்கள் என் தலைவர். அந்த வகையில் தங்கள் ஆணைக்குக் கட்டுப்பட நான் கடமைப்பட்டவன். ஆனால் தலைவர்கள் வருவார்கள். போவார்கள். தமிழ்நாடு அப்படி வந்து போகும் பொருளல்ல. என்றென்றும் நிலைத்திருக்கும் புனித பூமி. தலைவருக்குக் காட்ட வேண்டிய மரியாதைக்காகத் தமிழகத்தின் எல்லைகளைப் பறிகொடுக்க என்னால் இயலாது. சிறை வாழ்க்கை எனக்குப் புதிதல்ல”

ம.பொ.சி. அறிவித்தபடி 3.7.1953 இல் போராட்டம் தொடங்கியது. அப்போது 144 தடை உத்தரவை மீறியதாக ம.பொ.சி. கைது செய்யப்பட்டு திருத்தணிகை சார்பு நீதி மன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார். அப்போது ஆறுவார சிறைத் தண்டனை வழங்குவதாக நீதி மன்றம் அறிவித்தது.

மேலே உள்ள ம.பொ.சி. உள்பட தலைவர்கள் உள்ள புகைப்படம் கைது செய்யப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.

– கதிர்நிலவன்

Leave a Response